Sunday, June 28, 2009

அற்றுப்போதல்

"ஓட்டிக்கு அப்புறம் உறவற்றுப் போயிற்று" என்பது தென்னாட்டில் வழங்கும்
பழமொழி. இதன் பொருள் என்ன?


ஒன்பது தலைமுறை முறைப் பெயர்களைக் கொண்டது தமிழினம். அவையாவன, ஓட்டன் -
ஓட்டி, பூட்டன் - பூட்டி, பாட்டன் - பாட்டி, தாத்தா - தாத்தி
(ஐயாம்மை/மாமம்மை) அப்பா -அம்மா, மகன் - மகள், பெயரன்(பேரன்) - பெயர்த்தி
(பேர்த்தி -> பேத்தி), கொள்ளுப்பெயரன்(கொட்பெயரன்) - கொள்ளுப்பெயர்த்தி,
எள்ளுப்பெயரன் -எள்ளுப்பெயர்த்தி என்பனவாம். இவற்றுள் "தாத்தி" என்ற சொல்
வழக்கற்றுப்போக (ஆய்+அச்சி -> ஆய்ச்சி ->) ஆச்சி, (ஆய் + ஆய் -> ஆயாய்
->) ஆயா முதலான சொற்கள் சில பகுதிகளில் வழங்குகின்றன.


உறவுமுறை வரிசையில் மிகத் தொலைவாக இருக்கும் உறவு என்பதனால் ஓட்டன்,
சேயோன் (-> சேயான் -> சீயான்) எனப்பட்டார். ஓட்டி, "சேயோள்" எனப்பட்டார்.
குடும்ப முதல்வர்களாக அவர்கள் கருதப்பட்டனர். அதனாலேயே, வாங்கிய கடனைத்
திருப்பித் தராமல் இருப்பவர்களிடம், "வாங்கிய கடனை உன் சீயானா (சேயோனா)
வந்து தருவார்?" என்று கேட்பது தென்னாட்டு வழக்கமாய் இருக்கிறது. ஓட்டன்
- ஓட்டியோடு உறவு முடிந்துபோகிறது என்பதைக் குறிக்க எழுந்ததே "ஓட்டிக்கு
அப்புறம் உறவு அற்றுப்போயிற்று" என்ற பழமொழி.


இப் பழமொழியில் "அற்றுப்போதல்" என்ற சொல்லின் பொருள் 'முழுமையாய்
நீங்குதல்' என்பதேயாம். இதில் "அற்று" என்பது "அறு" என்ற சொல்லின் இறந்த
கால வினையெச்ச வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. "அறு" என்ற சொல்லிலிருந்து
"அறுந்து", "அறுத்து" ஆகிய வடிவங்களே எழும்.'பெறு -> பெற்று என்பதுபோல்
பகுதி இரட்டித்துவந்தது' என்று கூறுதல் பொருந்துவதாக இல்லை.


தென்னாட்டில் இன்றும் வழக்கத்தில் "அல்"(லுதல்) என்ற அகரமுதலிகளில்
இடம்பெறாத சொல் உள்ளது. கயிற்றை "அல்லு", "அற்றிடு" (அத்திடு) என்றால்
கயிற்றை 'அறு', 'அறுத்துவிடு' என்பதே பொருளாகும். கல் (கற்றல்), வில்
(விற்றல்) ஆகிய சொற்களைப் போலவே, அற்றான், அற்கிறான் (அக்கிறான்),
அற்பான் என்று புடைபெயர்ச்சி கொள்ளும் இச் சொல்லின் இறந்த கால வினையெச்ச
வடிவமே "அற்று" என்பதாம்.