Thursday, February 9, 2023

துல் என்னும் வேர்ச்சொல் - முன்வருதல் கருத்து வேர்


துல் என்னும் வேர்ச்சொல்
(முன்வருதல் கருத்து வேர்)

[வேர்ச்சொல் கட்டுரைகள் நூலில் பாவாணர் எழுதாது விட்ட கட்டுரை இது. அவரை முழுமையாகப் பின்பற்றி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பல மூலங்கள் அவர் கண்டு காட்டியவையே!] 

தமிழ்ச் சொற்களின் மூலம் கண்ட தமிழ்மூலர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். உல் என்னும் விதைச்சொல்லும் குல், சுல், துல், நுல், புல், முல் ஆகிய வேர்ச் சொற்களும் எண்பெருங்கருத்துகளின் அடிப்படையில் இயங்கித் தமிழின் பெரும்பான்மையான சொற்களைத் தோற்றுவித்துள்ளன என்பார் பாவாணர். 

'துல்' என்பது  முன்வருதல்  பொருண்மையுடைய வேர்ச்சொல். 
துல் → தெல் = முன்வைத்துள்ள காய்களைத் தெறித்து விளையாடும் விளையாட்டு, தெல் தெறிக்கப் பயன்படும் கழற்சிக் காய். 

துல் → துள் 
துள் → துள்ளு. 
துள்ளுதல் = 1. எம்பிக் குதித்தல். "துள்ளித்தூண் முட்டுமாங்கீழ்" (நாலடி.64) 2. தாவிச் செல்லுதல். “துள்ளு மான்மறி ஏந்திய செங்கையில்" (தேவா, 93,5) 3. உடல் பதைத்தல். "துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து". (கலித்.4) 4. பொங்குதல், மிகுதல், "அனையது கேட்டலோடு மறிஞர்கள் மகிழ்ச்சி துள்ள" (திருவானைக். நைமி. 28) 5. மனச் செருக்கினால் துள்ளுதல். "துள்ளுகின்றார் கூட்டமுறேல்" (அருட்பா,1,நெஞ்சறி,635) 
ம. துள்ளுக. க. துள்ளு. து. துள்ளுனி குடகு. துள். தெ த்(ரு)ல்லு. 

துள்ளு = 1. குதிப்பு 2. செருக்கு. "துள்ளுவார் துள்ளடக்கும் தோன்றலே" (அருட்பா,2,அருட்டிறத்,7) தெ. துள்கு 

துள் → துள்ளி = துள்ளி வரும் நீர்த்திவலை. "வானத்தின் துள்ளியல்லால்" (மேருமந்.121). ம.துள்ளி 

துள்ளி → துள்ளம் = துளி. "துள்ளஞ்சோர" (திவ்.பெரியாழ், 5,1,7) 
துள்ளி → துளி = 1.நீர்த் திவலை 2. ஒரு சிற்றளவு. 
ம. துளி, க. துளகு, தெ, தொளுகு குடகு. தொள்க, துடவம். தொளி, கோண்டு. துளி, பாஞ்சோ. தொள்க. 

துளித்தல் = (செ.கு.வி) 1 துளித்துளியாய் விழுதல் "மதுவந் துளிக்கும் சோலை" (தேவா. 395.4) 2.  மழை பெய்தல் "மங்கு வற்கமொடு பொங்குடி துளிப்ப* (அகநா. 235) (செ.குன்றா.வி) துளியாய்த் தெளித்தல்.
ம. துளிக்க. 

துள் → துள்ளல் = 1. துள்ளுகை. "பேயும்பேயும் துள்ளல் உறுமென" (கலித்.94) 2. துள்ளியாடும் கூத்து. 3. சந்தத்தின் முடுகிசை 4. கலிப்பாவிற்குரிய துள்ளல் ஓசை. (காரிகை.செய்.1) 5. கூத்தாடும் கூத்தன்  6. துள்ளத் துடிக்க வைக்கும் ஆட்டு நோய் வகை. 
துள்ளல் செலவு = யாழ் வாசிப்பு முறையுள் ஒன்று. "குடகச் செலவும் துள்ளல் செலவும்" (சீவக.657உரை) 
துள்ளாட்டம் = 1. களிப்பு 2. செருக்கு. 

துள் → துளும்பு. 
துளும்புதல் = 1. துள்ளுதல் (சூடா) 2. ததும்புதல், "துளும்பு கண்ணீருள் மூழ்கி" (திருவிளை. மாணிக்க.துதி) 3.  மேல் எழுதல் "தூர் துளும்ப (சீவக.1674) 4. அசைதல். "வம்பிற் றழும்புமுலை வாணெடுங்கண் மடவார்" (மேருமந். 121) ம. துளும்பு, க. துளுகு. 

துளும்பு → தளும்பு 
தளும்புதல் = கலம் அசைவதால் நீர் சிறிது துள்ளுதல். 

துளும்பு → துடும்பு
துடும்புதல் = ததும்புதல் 'துடும்பல்வேலை துளங்கிய" (கம்பரா.சேதுபந்தன.59) 

துள் → தெள். தெள்ளுதல் = 1. கொழித்தல். 2. அலை கொழித்தல், "கரி மருப்புத் தெள்ளி" (திருக்கோ.128) 
ம. தெள்ளுக. 

தெள் → தெளி. 
தெளித்தல் = துளிதுளியாய்ச் சிந்துதல் "நறுவிரை தெளித்த (அகநா. 196) 2. விதைத்தல், 3. கொழித்தல். 

தெளி → தெறி. 
தெறித்தல் = ( செ.குன்றா, வி) 1. துளி துள்ளி விழுதல், "முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப" (அகநா.289) 2. மேல்படுதல். "மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே" (சிலப்.20,72)
(செ.கு.வி) விரலால் சுண்டுதல், விரலால் உந்துதல், "சிலையை நாண் தெறித்தான்" (கம்பரா.தேரேறு.29) 

துள் → துரு. 
துருத்துதல் = முன் தள்ளுதல் 
துருத்து → துருத்தி = 1. காற்றை முன்தள்ளும் கொல்லுலைத் தோற்கருவி. "கொல்லன் விசைத்துவாங்கு துருத்தியின்" (அகநா.224) 2. துருத்தி போன்ற தோற்பைக் குழல். 3. முன்தள்ளிய வயிறு. 

துரு → தூர். 
தூர்த்தல் = முன்னால் பெருக்கித் துப்புரவு செய்தல். "சினகராலயம்  தூர்ப்பது திருமெழுக்கிடுதல்" (உபதேசகா.சிவபுண்ணிய, 50) 

தூர் → தூரம் = 1. தள்ளி நிற்கும் தொலைவு. 2. தள்ளிய உறவு, 3. சேய்மை. 
சில குலத்துப் பெண்கள் மாதவிலக்கினை வீட்டுக்குத் தூரம் என்று குறித்தல் காண்க. 
தூரத்துச் சொந்தம், தூரத்து உறவு, தூரத்துச் சுற்றம், தூரத்தார், தூரப்பார்வை (×கிட்டப் பார்வை), தூரப் போதல், தூரஇருத்தல் முதலான கூட்டுச்சொற்கள் தூரம் என்னும் சொல் தமிழே என்பதை எண்பிக்கும். நெடுந்தொலைவு செல்பவரைத் தூரவா போகிறீர்கள் என்று வினவுவதை எண்ணுக. தூரம் என்ற தமிழ்ச் சொல்லை dhuram என்று பலுக்குவதால் அது வடசொல் என்று கருதப்படுகிறது. 

துள்ளு → தள்ளு. 
தள்ளுதல் = 1.முன்தள்ளுதல் 2, (தோணியை) முன் செலுத்துதல். 3. தூண்டுதல். "காண்டுமென் றறிவு தள்ளி" (கம்பரா.சம்பா.54) 
ம. தள்ளுக. க. தள்ளு, து தள்ளுனி தெ, தள்கு, கோண்டு. தள், 
குலை தள்ளுதல், வயிறு தள்ளுதல் என்ற வழக்குகளை நோக்குக. 

துள் → (துட்பு) → துப்பு 
துப்புதல் = வாய் வழியாக எச்சிலையோ சளியையோ நீரையோ வெளித்தள்ளுதல். 
துப்பு → துப்பல் = எச்சில். 
துப்பு → துப்பணி = 1. துப்பிய எச்சில் 2. எச்சில் துப்ப உதவும் சாம்பல் அல்லது மணல் நிரப்பிய கொட்டான். 

துள் → துன். 
துன் → துன்னல் = துளி. "அன்னலுந் துன்னலுமாகவிட்டு" (ஈடு, 6,2,10) 

துன் → தும். 
தும் → துமி = நீர்த்துளி, மழைத்துளி.
தும் → தும்பல் = சிறு மழை. "மழை தூறலும் தும்பலுமாய் இருக்கிறது" (உ.வ) 
தும் → தும்மு. 
தும்முதல் = மூக்குவழியாய்க் காற்றைத் தள்ளுதல். "ஊடியிருந்தேமாத் தும்மினார்" (குறள் 1312) 

தும்மு → (துவ்வு) → துவு→ துவல். 
துவல்(லு)தல் = துளித்தல், தெளித்தல்,
துவல் → துவலை = துளி. "சிதரலந் துவலை தூவலின்" (அகநா.24) 

துவல் → துவறு. 
துவறுதல் = மழை தூவுதல். 
துவறு → தூறு. 
தூறுதல் = மழைத்துளி விடுதல். 
ம. தூறு, க. தூறு, தெ. தூறு. 
துவறு → துவற்று. 
துவற்றுதல் = மழை தூவுதல். 
துவற்று → தூற்று 
தூற்றுதல் = 1. பதரையும் மணியையும் பிரித்தற்குக் கூலத்தை முன்னாக வாரியிறைத்தல். "கால்வரத் தூற்றி" (சேதுபு.நிருநாட்.74) 2. சிதறுதல். "தென்ற றூற்றும் குறுந்திவலை" (கம்பரா.கடல்காண்.5) 3. மண்ணை வாரி இறைத்தல் 4. பழிச் சொற்களைப் பரப்புதல். "சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற" (சிலப். 4.18) 5. வீண் செலவு செய்தல். 
ம. தூற்றுக க. தூறு. 
தூற்று → தூற்றல் = 1. மழைத்துளி 2.பழிச்சொல். ம. தூற்றல். 

துவ்வு  → தூவு. 
தூவுதல் = 1. தெளித்தல். "நன்னீர் தூய்" (திவ்.திருவாய்.1.6.1) 2. இறைத்தல் 3. மிகச் சொரிதல் "வெங்கணை தூவி" (சீவக.453) 4. சிறிது சிறிதாய் மேற்பெய்தல். "தூப எமலர் தூவி" (தேவா.542;3) 
தூவு → தாவு. .
தாவுதல் = தாண்டுதல், "கடல்தாவு படலம்" (கம்பரா). ம. தாவுக  

துவ்வு → தவ்வு. 
தவ்வுதல் = தாவுதல். "தவ்வு புனல்" (திருவாலவா.30:32) 
தவ்வு = பாய்ச்சல் 
தவ்வு → தவு 
தவு → (தவள்) → தவளை = தவ்விச் செல்லும் உயிரி. “தவளைத் தண்டுறை கலங்கப் போகி" (பெருங்.மகத.3,21) 

தவள் → (தவட்கை) → தவக்கை = தவளை. (நெல்லை வழக்கு) 
தவக்கை நீச்சல் = மல்லாந்த நிலையில் அடிக்கும் நீச்சல். 
இச் சொல்லே தவக்கா(ய்) என்றும் தவக்களை என்றும் திரிந்து வழங்குகிறது. 

தவு→ தவழ். 
தவழ்தல் = 1. தத்திச் செல்லுதல், 2. தத்துதல். "ஓதங் கரைதவழ் நீர்போல்" (பு.வெ.8;9) 

தும் → துந்து. 
துந்து → துந்தி = முன் தள்ளிய வயிறு (தைலவ.தைல.90) 2. கொப்பூழ் 
துந்தி → தொந்தி = முன் தள்ளிய வயிறு.  ம.தொந்தி. 

துந்து  → துத்து. 
துத்து  → தத்து. 
தத்துதல் = 1. குதித்தல். "தத்தாவுறு தடந்தேரினை" (கம்பரா.நிகும்பலை.121) 2. தாண்டுதல் "ஞாலந் தத்தும் பாதனை" (திருவிருத்.79) 3. தாவிச் செல்லுதல். தத்திப் புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும்" (பரிபா.10,14) 4. தாவி ஏறுதல். "ஏற்றுப் பிணரெருத்திற் றத்துப" (கலித்.168 : 34) 5.ததும்புதல். "தத்து நீர்க்கடல்" (கம்பரா.படைத்தலைவ.54)  6. பரத்தல். "தத்தரி நெடுங்கண்" (மணி.2,7) 7. ஒளி முதலியன தெறித்தல். "தத்தொளி மணிமுடி" (சீவக.144) 

துத்து  → துது → தூது. ஒ.நோ : கது → காது. 
தூது = 1. முன்சென்று உரைக்கும் செய்தி. 2. தூது மொழி. "தூதுரைப்பான் பண்பு" (குறள் 681) 3.தூது செல்வோன். "தக்க தறிவதாந் தூது" (குறள் : 686) 4. அரசத் தூதர் தன்மை (குறள் 69. அதிகாரம்) 5. காமக் கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல். “தூது செய் கண்கள் கொண்டொன்று பேசி" (திவ்.திருவாய். 9,9,1) 5. செய்தி, "தொட்டு விடுத்தே னவனைத் தூது பிற சொல்லி" (சீவக 1876). 6. ஒரு சிற்றிலக்கிய வகை. 
ம. தூது, க. தூது, தெ. தூத. 
 அரசரும் காதலரும் ஒருவர் ஓருவரிடைச் செல்வதை முன்  அறிவித்தற்காக விடுக்கும் செய்தியே முதன்முதல் தூது எனப்பட்டது. கண்ணன் தூது, அங்கதன் தூது முதலியவற்றை நோக்குக. பிற்காலத்தில் செய்தி அறிவிப்பது என்று மட்டும் பொருள்பட்டது. 

தூது → தூதன், தூதுவன் தூதாள் (= தூது செல்பவன்) 
தூது → தூதி, தூதிகை (= தூது செல்பவள்)
தூதிற் பிரிவு அகப் பொருட் பிரிவு வகையுள் ஒன்று. தூதிடையாடலும் தூதுவென்றியும் புறத்துறை வகைகள்.
தூது →  தூதர் = ஒரு நாட்டின் படிநிகராளியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்படும் அரசு உயர் அதிகாரி Ambassador. 
தூதர் → தூதரகம் = தூதரின் அலுவலகம். Embassy. 
தூதுக்குழு → விடைமுகர் குழு (Delegates) 
தூதஞ்சல் = நேரில் சென்று  கொடுக்கும் தனியார் அஞ்சல் courier.

Saturday, April 9, 2011

வேட்டை - பிற்குறிப்பு

"வேட்டை" என்னும் சொல் "வேள்" என்னும் 'விரும்புதல்' பொருளுடைய
சொல்லிலிருந்து தோன்றியதாக மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் கருதுகிறார்.

வேள் = விருப்பம்.
வேள் -> வேண் = விருப்பம்.
வேள் -> வேட்டம் = விருப்பம், உயிரிகளை விரும்பிப் பிடித்தல்.
வேள் -> வேட்டை. (முதல்தாய்மொழி.பக்.167.)


'கன்னிவேட்டை', 'ஊன்வேட்டை', 'நரவேட்டை', 'வேட்டையாடுதல்', 'வேட்டையாடிக்
கொல்லுதல்' (எ-டு : முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களைச் சிங்களப் படைஞர்கள்
வேட்டையாடிக் கொன்றனர்.) முதலான தொடர்களை நோக்கும்போது, 'விரும்பிப்
பிடிப்பதே வேட்டை' என்ற கருத்து பொருத்தமானதாகத் தோன்றவில்லை;
'விரட்டியும் வெருட்டியும் பிடிப்பதே வேட்டை' என்ற கருத்தே
உறுதிப்படுகிறது.

"சிரமறுத்தல் வேந்தர்க்குப் பொழுது போக்கும்
சிறிய கதை! நமக்கெல்லாம் உயிரின் வாதை!"
- பாவேந்தர் பாரதிதாசனார்.

ஒருகால் "வெருள்" என்னும் சொல்லிலிருந்து, (வெருள் -> (வேள்) -> வேட்டை)
என "வேட்டை"ச்சொல் தோன்றியிருக்கலாம்.

Saturday, December 25, 2010

வேட்டை

நம் தமிழ்மொழியில் உள்ள ஒலிக்குறிப்புச் சொற்களுள் பல அடிச்சொற்களாகவும்
அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று "விரு"(விர்) என்பது. விரைவுப் பொருளை அடிக்
கருத்தாகக் கொண்டது. "விருவென்று பறவை பறந்துபோனது", "விருவென்று சினம்
வந்தது", "விருவிருவென்று போ" ஆகிய தொடர்களில் "விரு" என்ற சொல் விரைவுப்
பொருளில் வந்துள்ளது.


விருவிருத்தல் = விரைதல்.
விருவிருப்பு = விரைவு.

விரு -> விருட்டு. "விருட்டென்று நடந்துபோ" என்பது நெல்லை வழக்கு.

விரு -> விரை.
விரைதல் = 1.வேகமாதல். "தன்னை வியந்தான் விரைந்து கெடும்" (குறள்,474)
2.உடனே செய்யத் துடித்தல் 3.ஆவலை வெளிக்காட்டுதல்.
விரை -> விரைவு = வேகம்.
விரைசொல் = விரைவைக் குறிக்கும் அடுக்குச் சொல் (தொல்.424)

விரைவு -> விரைசு. "விரைசாய் நடந்து போ" என்பது நெல்லை வழக்கு.
விரைசு -> விரைசல் = சுறுசுறுப்பு. (கொங்கு வழக்கு)
விரைசு -> விரசு = விரைவு.
விரசுதல் = 1.மிகவும் விரைவுபடுத்துதல் 2.சொல்லால் கடிந்து வெருட்டுதல்.


உடலும் நெஞ்சாங்குலையும் விரைந்து அசைவது அச்சத்தைக் குறிக்குமாதலால்,
விரைவுக் கருத்திலிருந்து அச்சக் கருத்து பிறக்கும் என்பார் மொழிஞாயிறு
ஞா.தேவநேயப் பாவாணர்.

விரை -> விர -> விரள்.
விரளுதல் = அஞ்சுதல்.
விரள் -> விரட்டு.
விரட்டுதல் = 1.துரத்துதல் 2.அச்சுறுத்துதல் 3.மிக விரைவுபடுத்துதல்.


விரு -> வெரு = அச்சம். "வெருவரு நோன்றாள்" (பொருந.147).
வெரு - Skt.'biru', 'bhiru'.
ஒ.நோ: OE.'faer' OS.'far' OHG.'far' G.'(ge)fahr' ON.'far' M.Du.'vaer' E.'fear'.


வெருவெருத்தல் = அஞ்சுதல்.
வெரு -> வெருவு.
வெருவுதல் = அஞ்சுதல். "யானை வெரூஉம்" (குறள்.599).
வெருவு = அச்சம்.
தெ. 'வெரப்பு'.
வெருவருதல் = 1.அஞ்சுதல் 'வெருவந்த செய்யாமை' (குறள்) 2.அச்சந்தருதல்.
"வெருவரு தானை" (பதிற்.70.பதி)
வெருவா -> வெருவந்தம் = அச்சம்.

வெருவு -> வெருகு = அஞ்சத்தக்க காட்டுப் பூனை.
Ka.'bergu','beggu'. Tu.'beru' Kod.'beggi' Ga.'verig'.


வெருக்கொள்ளுதல் = அச்சங்கொள்ளுதல்.
வெருகு -> வெருக்கு = அச்சம். "வெருக்கு வெருக்கென்றிருக்கிறது". (உ.வ.)


வெரு -> வெருள்.
வெருளுதல் = 1.மருளுதல். "கண்டார் வெருளாவண்ணம்" (திருவாச.32.3)
2.அஞ்சுதல். "பீடற வெருளி" (பெருங்.மகத.24.84) 3.மாடு குதிரை முதலியன
மிரண்டு கலைதல்.
வெருள் = 1.அஞ்சத்தக்கது. "நின்புகழ் இகழ்வார் வெருளே" (திருவாச.6.17)
2.மனக் கலக்கம் (சூடா)
வெருள் -> வெருளி = 1.மருட்சி. "வெருளி மாடங்கள்" (சீவக.532) 2.வெருளச்
செய்யும் புல்லுரு முதலியன. 3.வறியாரை வெருட்டும் செல்வச் செருக்கு.
"வெருளி மாந்தர்" (சீவக.73)


வெருள் -> வெருட்டு.
வெருட்டுதல் = 1.அச்சுறுத்துதல். "படர்சடைக ளவைகாட்டி வெருட்டி"
(தேவா.676.2) 2.திகைக்கச் செய்தல். "நாட்டை வெருட்டித் திரிகிற"
(ஈடு.2,7,8.) 3.விலங்கு முதலியவற்றை ஓட்டுதல்.
வெருட்டு = 1.அச்சம் உண்டாக்குகை 2.ஓட்டுகை 3.வேகமாகச் செல்லத் தூண்டுகை.


வெருட்டு -> வெருட்டை -> வேட்டை.
வேட்டை = விலங்கு பறவைகளை விரட்டிப் பிடிக்கும் வினை அல்லது தொழில்.
"வேட்டை வேட்கைமிக" (கம்பரா.நகர்நீங்.74) 2.வேட்டையில் கிடைக்கும்
பொருள். "வேட்டை வாய்த்ததின்று" (திருவாலவா.44.38) 3.வேட்டையில் நேரும்
கொலை. "ஆருயிர் வேட்டை" (திருநூற்.56).
ம.'வேட்டை' தெ.'வேட்ட' க.'பேட்ட'.

வேட்டை -> வேட்டம் = 1.வேட்டை "வயநாய் பிற்பட வேட்டம்போகிய குறவன்"
(அகநா.182) 2.தலைவேட்டையாடும் கொலை. (பிங்.)

வேட்டையாடுதல் = கொல்லுதற்கேனும் பிடித்தற்கேனும் காட்டிலுள்ள விலங்கு
முதலியவற்றைத் துரத்திச் செல்லுதல்.
வேட்டைநாய் = 1.வேட்டையாடப் பழகிய நாய் 2.விரட்டிக் கடிக்கும் நாய்.


வேட்டம் -> வேட்டுவன் = 1.வேட்டைக்குச் செல்வோன் 2.வேடன் 3.குறிஞ்சி நில ஆடவன்.
வேட்டுவன் -> வேடுவன் = வேடன்.


வேடுவன் -> வேடு = 1.வேடன் (இலக்.அக) 2.வேடர்குலம் "வேடுமுடை வேங்கடம்"
(திவ்.இயற்.47) 3.வேடர் தொழில் "வேட்டொடு வேய்பயில் அழுவத்து" (அகநா.318)
4.வரிக்கூத்து வகை (சிலப்.3:13.உரை).
வேடு -> வேடன் = 1.வேட்டுவன் 2.பாலை நில வாழ்நன். (திவா)
ம.'வேடன்' தெ. 'வேட்ட' க. 'பேட' து. 'வேட்ட'.

Saturday, December 18, 2010

வம்பு

"வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைத்ததுபோல், அந்தக் காரியத்தை
வம்பாய்க் கெடுத்திட்டாயே !"
தெருவிலே தம் நண்பரோடு ஒருவர் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும்,
'ஊர் வம்பெல்லாம் உனக்கு எதற்கு?' என்று ஒதுங்கிப்போகும் இயல்புடைய
எனக்கு வம்பைப்பற்றி ஆராயும் எண்ணம் தோன்றியது.

தொல்தமிழின் முந்துநூலான தொல்காப்பியம் "வம்பு" என்ற சொல்லின் பொருள்
"நிலையின்மை" என்று உரியியலில் குறிப்பிடுகிறது. நிலையாக ஓரிடத்து
இல்லாமல் வேற்றூரில் திரிவோரையும் நிலையான தம் இயல்புகளிலிருந்து மாறி
அமையும் மக்களையும் இயற்கையையும்கூட "வம்பு"ச் சொல் குறித்துள்ளது.

வம்ப மாந்தர் = தம் ஊரில் வதியாது வேற்றூர் வந்த புதியோர்.
வம்பலன் = புதியோன், வழிப்போக்கன், அயலான்.
வம்ப மாக்கள் = புதியோர். (சிலப்,5.111)
வம்பப் பரத்தர் = ஒரு கூட்டத்திலும் சேராத மாந்தர்.(சிலப்,16.63 உரை)
வம்பப் பரத்தை = கழிகாமத்தையுடைய கணிகை. (சிலப்,10.219)
வம்புப் பிள்ளை = முறைதவறிய பெண் பெற்ற குழந்தை.
வம்ப மாரி = காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை.
வம்புக் காய் = பருவம் தப்பிக் காய்க்கும் காய்.
வம்புப் பாளை = பருவமற்ற காலத்தில் பனைமரம் புதிதாக விடும் பாளை.


நிலையில்லாத இவற்றால் நீடித்த பயன் இல்லை என்பதை மக்கள் உணர்ந்தபின்னர்
"வம்பு"ச்சொல், 'பயன் இல்லாமை, வீண்' ஆகிய பொருள்களை உணர்த்தியுள்ளது.
வம்பு = பயன் இல்லாமை. "வம்பு பழுத்து" (திருவாச.40.6)
வம்பன் = பயனற்றவன். "வம்பனாய்த் திரிவேனை" (திருவாச.42.9)

இச் சொல் தெலுங்கு மொழியில் இதே பொருளில் "வம்மு" என வழங்குகிறது.
பயனற்றுப் போதலைத் தெலுங்கர் "வம்மு போவு" (வம்பாய்ப் போதல்) எனக்
குறிப்பிடுகின்றனர்.


அதன்பின்னர் தீயனவற்றைப் பேசுதலும் செய்தலுமே பயனற்றவை எனக் கொண்டு,
அவற்றின் வகைகளையும் "வம்பு"ச் சொல் பொருள்களாகப் பெற்றுவிட்டது.

வம்பு = 1.வீண்சொல், 2.பழிச்சொல், 3.தீய சொல், 4.பொய், 5.இடக்கர்ச் சொல்,
6.சிற்றொழுக்கம், 7.சிறு சண்டை.

வம்படித்தல் = 1.வீண்சொல் பேசுதல், 2.வேடிக்கையாய்ப் பேசுதல், 3.தீது
பேசுதல், 4.பழித்துப் பேசுதல், 5.தீங்கு செய்தல்.

வம்பளத்தல் = பழிமொழி பேசுதல்.

வம்புப் பேச்சு = வீண் பேச்சு.


"வழு" என்ற சொல்லிலிருந்து இச் சொல் தோன்றியிருக்கலாம்.

வழுவுதல் = நழுவுதல், சறுக்குதல், தவறுதல்.

வழுக்குதல் = சறுக்குதல், தவறு செய்தல்

வழுவழுத்தல் = வழுக்குதல், வழவழப்பாதல்.

வழுக்கும் இடத்தில் கால் நிலையாய் நிற்கமுடியாமையால் நிலையின்மைப் பொருள்
தோன்றி இருக்கலாம்.

வழு -> வழும்பு.
வழும்பு = தீங்கு, குற்றம்.

வழும்பு -> (வய்ம்பு) -> வம்பு.
ஒ.நோ : குழும்பு -> (குய்ம்பு) -> கும்பு.
கும்பு -> கும்பல்.


தீயனவற்றைப் பேசுதலையும் செய்தலையும் குறிக்கும் "வம்பு"ச் சொல், "வன்பு"
என்ற சொல்லின் திரிபாகும். "வல்" என்ற பொருந்தற் கருத்து வேரிலிருந்து
பிறக்கும் 'வல்லமை', 'வலிமை' ஆகிய சொற்கள் கட்டுப்பாடுடைய ஆற்றலையும்
'வன்மை' என்ற சொல் கட்டுப்பாடற்ற ஆற்றலையும் குறித்திடும்.

வல் -> வன் -> வன்மை.
வன்பாடுபடுதல் = அரும்பாடுபடுதல்.
வன்கொலையாய் இருத்தல் = பசி,பட்டினியாய் இருத்தல்.
வன்கொடுமை = மிகப் பெரிய கொடுமை.

வன் + பு = வன்பு -> வம்பு.
ஒ.நோ : தென்பு -> தெம்பு.

உடலில் வன்மை மிகுந்தால் செய்யவேண்டாத செயல்களை எல்லாம் செய்யத்
தூண்டும். இதன் அடிப்படையில்தான், 'வம்பு வளர்த்தல், வம்புச் சண்டைக்குப்
போதல், வம்புதும்பு பண்ணுதல், ஊர்வம்பை விலைக்கு வாங்குதல், வம்பேறி'
முதலான சொல் வழக்குகள் எழுந்துள்ளன.


"வம்பு"ச் சொல், 'அரைக் கச்சு, யானைக் கச்சு, மார்புக் கச்சு, கையுறை,
மேற்போர்வை' ஆகிய பொருள்களையும் குறிக்கிறது. இவை வளைவுக் கருத்து வேரான
"வல்" என்பதினின்று தோன்றியிருக்கலாம்.

வல் -> வலை.
வல் -> வலம் (ஊர்வலம், வலம்வருதல்)
வல் -> வல.
வலத்தல் = சுற்றுதல், சுற்றிக் கட்டுதல்.
வல் -> வன் -> வன்பு -> வம்பு.

Sunday, September 27, 2009

கத்துதல்

"கத்துதல்" என்ற சொல்லின் பொருள் என்ன? என்று கேட்டால் "உரக்க ஒலி
எழுப்புதல்" என்று எளிதாகச் சொல்லிடுவோம். ஏனென்றால், பறவைகளும்
விலங்குகளும் உரக்க ஒலி எழுப்புவதனையும் கடல் உரத்து முழங்குவதையும்
மாந்தர்கள் உரக்கக் கூப்பிடுவதையும் உரக்க ஓதுவதையும் உரக்கப் பேசுவதையும் உரக்கத் திட்டுவதையும் "கத்துதல்" என்றுதான்
குறிப்பிடுகிறோம்.

ஒரு நிகழ்வை அல்லது செய்தியை அல்லது வரலாற்றைத் தம்மைச்
சுற்றியிருப்பவர்களிடம் உரத்த குரலில் ஒருவர் கத்திச் சொல்வது அந்தக்
காலத்தில் "கதை" என்று அழைக்கப்பட்டது.
கத்து -> (கது) ->கதை.
கதை சொல்வதுபோல நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதை நெல்லைப் பகுதியில் "கதைபேசுதல்" என்பார்கள். இந்தச் சொல்தான் "கதைத்தல்" என்ற சொல்லாக உருமாறியுள்ளது.

கதை -> கதைத்தல்.

கதைத்தல் = கதைபேசுவதுபோல் நெடிது பேசுதல், பேசுதல் (யாழ்.வழக்கு) ,
சொல்லுதல் (திவாகரம்).

கதைதல் = உரக்கச் சொல்லுதல், சிறப்பித்துச் சொல்லுதல்.
கத்து -> (கது) -> கதித்தல்.

கதித்தல் = உரத்த குரலில் ஆணையிட்டுச் சொல்லுதல்.
கத்து ->; (கது) -> கதறு.
கதறுதல் = மாந்தர்கள் உரக்க ஒலி எழுப்பி அழுதல், கால்நடைகள் கத்துதல்.

"கத்துதல்" என்னும் சொல்லிற்கு வேறு பொருள்களும் உண்டு. அவை குத்தி
அறுத்தல் வெட்டுதல் நறுக்குதல் என்பனவாம்.

"குத்துதல்", "கொத்துதல்" ஆகிய சொற்கள் இந்தக் "கத்துதல்" சொல்லோடு தொடர்பு உடையவை.

காது குத்துவதுபோல, கத்தியால் குத்துவதுபோல, உள்துளைத்துக் குத்துவது
குத்துதல் எனப்படும். உடம்பைத் துளைப்பதுபோல் கைமுட்டியை மடக்கித்
தாக்குவதும் மாடு முட்டுவதும் உரலில் உலக்கையால் குத்துவதும் குத்துதல்
எனப்படும். குத்துவதால் உண்டாகும் வலிபோல உடம்பில் தோன்றும் நோவும்
குத்து எனப்படும். எ-டு : தலைக்குத்து. மனம் நோகும்படிப் பேசுவதும்
குத்துதல் எனப்படும். எ-டு : குத்திப்பேசுதல், குத்திக்காட்டுதல்.

மண்வெட்டியால் நிலத்தைக் கிண்டுவதும், பறவைகள் அலகால் கொத்தித்
தின்னுதலும், பாம்பு கடித்தலும், எழுத்து முதலியன செதுக்குதலும்
"கொத்துதல்" எனப்படும்.

குத்துதல் என்பது ஆழமாகத் துளைப்பதுபோல் குத்துவதையும் கொத்துதல் என்பது மேலாகக் குத்துதையும் குறிக்கும். கோழி தவசங்களைக் கொத்தியெடுப்பதையும் கொக்கு மீன்களைக் குத்தியெடுப்பதையும் ஒப்பிட்டு உணர்க. இவற்றிற்கு இடைப்பட்ட நிலை "கத்துதல்" என்பதாம்.

குத்து -> கொத்து -> கத்து.
கத்துதல் = குத்தி வெட்டுதல், குத்தி நறுக்குதல்.
கத்து -> கத்தி = குத்தி வெட்டும் அல்லது அறுக்கும் கருவி.
கத்தி + அரி = கத்தரி.
கத்தரித்தல் = கொஞ்சங்கொஞ்சமாய் வெட்டியரித்தல்
(திவாகரம்),அறுத்தல்.வெட்டி விலக்குதல், நட்புப் பிரித்தல், கிளைகளாய்ப்
பிரிதல்
.
கத்தரி = கத்தரிக்கோல். கத்தரி -> கத்தரிகை = கத்தரிக்கோல்.
கத்தரி -> கத்தரிப்பான் = கத்தரிக்கோல்.
கத்தரி -> கர்த்தரீ (சமற்கிருதம்).

கத்து -> கத்தல் = கறியைக் கொத்துதல் (குமரி மாவட்ட வழக்கு).
கத்து -> கத்தாப்பு = கறியைக் கொத்தித் தருதல்.
கத்தாப்பு -> கச்சாப்பு -> கசாப்பு (உருது).
கத்து -> காட் (இந்தி), ME. cutte, SW. kata, E. cut.

Monday, August 17, 2009

கொல்லை

பண்டைக் காலத்தில் முல்லை நிலத்திருந்த வானவாரிக் காடுகள் "கொல்லை"
எனப்பட்டன. புதிதாக உருவாக்கிய கொல்லை "இதைப்புனம்" என்றும் நெடுநாட்களாக
வேளாண்மை செய்துவரும் பழைய கொல்லை "முதைப்புனம்" என்றும் அழைக்கப்பட்டன.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். எனவே, 'முல்லை நிலக்
காடுகளைக் கொன்று (அழித்து) உருவாக்கிய நிலம் கொல்லை' என்று அறிஞர்
சிலர் கருதுகின்றனர். இக் கருத்து சரியானது அன்று.


"கொல்லுதல்" என்னும் சொல்லிற்கு 'அழித்தல், வெட்டுதல்' ஆகிய பொருள்களோடு
'உழுதல்' என்ற பொருளும் உண்டு. "முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர்"
(குறுந்தொகை.155) "விதையர் கொன்ற முதையல்" (நற்றிணை.121) ஆகிய செய்யுள்
வரிகளில் "கொன்ற" என்னும் சொல், 'உழுத, உழுது பண்படுத்திய' என்ற பொருளில்
வருதல் காண்க. அதனையொற்றி, உழுவதற்குப் பயன்படும் உழுபடையும், "கொழு"
என்றும் "காறு" என்றும் பெயர்பெற்றன.
கொல் -> கொழு.
கொல் -> (கோறு) -> காறு.
ஒ.நோ : கொல் + தல் = கோறல்.
காறு - OE.scear. ME.schar. E.share.
GERMAN.schar,schaar.

Wednesday, July 29, 2009

கூத்து

இயல், இசை, நாடகம் என்பன முத்தமிழ். அவற்றுள் நாடகத் தமிழ் கூத்து,
நடனம், நாடகம் என மூன்று வகைப்படும். நடனத்திற்கும் நாடகத்திற்கும்
அடிப்படையாய் அமைந்தது கூத்து. அது வேத்தியல் கூத்து -பொதுவியல் கூத்து,
உலகியல் கூத்து - தேவியல் கூத்து, வசைக் கூத்து - புகழ்க் கூத்து,
அமைதிக் கூத்து - வேடிக்கைக் கூத்து, அரங்கக் கூத்து - தெருக் கூத்து
எனப் பல்வேறு வகையில் இரண்டிரண்டாக வகைப்படுத்தப்படும்.


"குதித்து ஆடுவது கூத்து" என்பார் பாவாணர். தெருக்கூத்து, கதைக்களி,
யட்சகானம் ஆகியவற்றில் நடிப்போர் குதித்தாடுதல் நோக்கி அவர் இவ்வாறு
கூறியிருக்கலாம்.


"குத்துதல்" என்ற சொல்லுக்குப் பல பொருள்களை அகரநிரலி (lexicon)
தருகிறது. அவற்றுள் இடம்பெறாத ஒரு பொருள் "தரையைக் குத்தி ஆடுதல்"
என்பதாம். இந்தப் பொருளில் இச் சொல் இன்றும் மக்கள் வழக்கில்
வழங்கிவருகிறது. கல்லாத எளிய மக்கள் நன்றாய் ஆடுபவனை "எப்படிக்
குத்துகிறான் பார்" என்று வியந்து பாராட்டுகின்றனர். தப்பை இசைக்கேற்ப
ஆடும் ஆட்டத்தைத் "தப்பாங்குத்து" (டப்பாங்குத்து) என்றே வழங்குகின்றனர்.
ஆடுபவர்களை தப்பாங்குத்து குத்தச் சொல்லிக் கண்டு மகிழ்கின்றனர்.

இந்தக் "குத்து" என்ற சொல்லிலிருந்துதான் "கூத்து" என்னும் சொல்
தோன்றியுள்ளது. குத்து -> கூத்து.