Wednesday, December 24, 2008

அட்டவணை

அட்டவணை என்ற சொல் மராத்தி மொழியிலிருந்து வந்தது என்று சென்னைப் பல்கலைக்கழக அகரமுதலி குறிப்பிடும். ஆனால், ஆய்ந்து காண்கையில் அது தூய தமிழ்ச் சொல்லாகவே தோன்றுகிறது. அடுத்தல் = ஒன்றன்மேல் ஒன்றாய்ச் சேர்த்தல். அடு ->அடுக்கு


அடுக்குதல் =
1.கலங்கள்போல் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தல்
2.வரிசைப்பட வைத்தல்
3.பணத்தை மேன்மேலும் பெருக்குதல்
4.சொற்களை மேன்மேலும்
தொடுத்தல்.


அடுக்கு =

1.ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கியது
2.வரிசை
3.அடுக்குக் கலம்
4.அடுக்குத் தொடர்
5.மேன்மேலும் உயர்ந்திருக்கும் செழிப்பு நிலை. அடுக்குஅடுக்காய் =
கட்டுக்கட்டாய், வரிசைவரிசையாய்.


அடுக்கல் =

1.ஒன்றன்மேல் ஒன்றாக வைத்தல்
2.அடுக்கு
3.குவியல்
4.அடுக்கடுக்காய் அமைந்த மலை.


அடுக்குத் தீவம் =
ஒன்றன்மேல் ஒன்றான வட்ட வரிசைகளாக அமைக்கப்பட்ட கோயில் விளக்கு வகை.
அடு -> அட்டு.
அட்டு -> அட்டி = நெல்,அரிசி

மூட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கும் வரிசை முறை.
அட்டி -> அட்டியல் = மூட்டைகளை அடுக்கிவைக்கும் வரிசை முறை.

அட்டு -> அட்டம் = கோட்டையின் மேலாக அமைக்கப்படும் காவல் பரண்.

அட்டம் -> அட்டாலை = வயல்களிலும் கோட்டையிலும் அமைக்கப்படும் காவல் பரண்,வீட்டுப் பரண்.
அட்டம் + அணை = அட்டமணை.

அட்டமணை -> அட்டவணை = பொருட்குறிப்புகளை அல்லது செய்திகளை ஒன்றன்மேல் ஒன்றாக எழுதிவைக்கும் பட்டியல், குறிப்பேடு.

கன்னடம் : அட்டவணெ.
துளுவம் : அட்டணெ. மராத்தி : அடவண.

Sunday, December 14, 2008

தோன்றின் புகழோடு தோன்றுக

காலை எழுந்ததும் குளம்பி குடித்துக்கொண்டே குறளைப் படிப்பது என் பழக்கம். அன்று "புகழ்" படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்து வீட்டு நண்பர், எங்கள் இல்ல வடிப்புக்குளம்பி(Filter coffee)யின் வழமை அன்பர், அருகில் வந்து அமர்ந்தார். நான் படித்த பகுதியைப் பார்த்துவிட்டுக் கேட்டார் : "இதில், `தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற குறள் நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தெரிகிறதே! புகழோடு பிறப்பதற்கு நாம் என்ன அமைச்சர் மக்களா, இல்லை நடிகர்களின் மக்களா, அல்லது இறும்பூதுப்
பிறவிகளா? பிறக்கும்போதே ஒருவர் எப்படிப் புகழோடு பிறக்கமுடியும்?" மடமடவென்று வினாக்களைத் தொடுத்த நண்பர், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என் முகத்தையே பார்த்தார்.

"அந்தக் குறளைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றிய கருத்தைச் சொல்லிவிட்டீர்கள். இதிலிருந்தே தோன்றுதல் என்றால் பிறத்தல் என்ற பொருள் மட்டுமன்று, உள்ளத்தில் தோன்றுதல் என்ற பொருளும் உண்டென்பது தெரிகிறது அல்லவா? சரி, புத்தர், காந்தி போன்ற பெருமக்களை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" "அவர்களின் செயற்கருஞ் செயல்கள்"

"அதாவது, அவர்களின் புகழ் உங்களுக்குத் தோன்றுகிறது. நல்லது; இற்றிலர்(Hitlor), கோட்சே போன்றோரை நினைத்தவுடன்" "அதாவது, அவர்களைப் பற்றிய இகழ் உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறது. இப்படிப் புகழும் இல்லாமல் இகழும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? " "அவர்கள்தாமே உலகத்தில் பெரும்பான்மையினர்." "நல்லது.

இந்த மூன்று வகையான மக்களைப் பற்றித்தாம் திருவள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டிருக்கிறார்." "எப்படி?"

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் இகழோடு தோன்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து தான் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்துபோகும் மக்களைப் போல ஒன்றுமே தோன்றாதிருப்பது நன்று. இப்போது சொல்லுங்கள்.. இந்தக் குறள்
நடைமுறைக்கு ஒத்ததுதானே.." நண்பர் நாவசைக்கமுடியாது ஆமெனத் தலையாட்டினார்.

Sunday, December 7, 2008

முனைவர்

பல்கலைக்கழகங்களில் வழங்கப்பெறும் "டாக்டர்" பட்டப் பெயரினைப் "பண்டாரகர்" என்று வழங்கினார் பாவாணர். ஆனால் அச் சொல் சிலர்க்குப் பண்டாரத்தை நினைவூட்டியதால் "முனைவர்" என வழங்கத் தொடங்கினர். "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல்" என்று தொல்காப்பியத்தைச் சான்று காட்டி இச் சொல்லே சரியான மொழிபெயர்ப்பெனச்
சிலர் வழக்காடினர். "முனைவு வெறுப்பாகும்" என்று தொல்காப்பியம்தானே கூறுகிறது. அதனால்தானே நம்மை வெறுக்கும் பகைவனும், உலகை வெறுத்த முனிவனும் "முனைவன்" எனப்பட்டனர் என்று சிலர்
எதிர்வழக்காடினர். வேறு சிலரோ"முனைதல்" என்ற சொல், ஒரு செயலை முழு ஈடுபாட்டோடு செய்வதைக் குறிக்கும்; எனவே, "முனைவர்" என்ற சொல்லைத் தொழில்முனைவோரைக் (entrepreneur) குறிக்க ஆளலாம் என்று கருத்துரைத்தனர்.

ஆனால் எதிர்ப்புகளை எல்லாம் மீறிக்கொண்டு "முனைவர்" என்ற சொல் இன்று வழக்கூன்றிவிட்டது. இதற்குப் பொருள் அமைதி எவ்வாறு கூறுவது? "முனை" என்ற சொல், முன்னையும் நுனியையும் முன்னிருக்கக்கூடிய தலைமையையும் நுனிவரையுள்ள உயர்வையும் குறிக்கும். எனவேதான், "முனைவன்" என்ற சொல் தலைவனையும் இறைவனையும் குறித்தது. முனை
- முனையன் - முனைவன். கல்வி நிலையில் உயர்வானதும் தலைமையானதுமான பட்டம் பெற்றவரை "முனைவர்" எனல் பொருத்தமுடையதுதானே.

Saturday, December 6, 2008

கரவணம்

தமிழ்ச் சொற்கள் பல ஒலிப் பிறழ்வால் உரு மாறி வடசொற்களாய் வழங்கிவருகின்றன. அவற்றுள் ஒன்று "கரவணம்" (கிரகணம்) . "கரத்தல்" என்ற சொல் மறைதலையும் மறைத்தலையும் குறிக்கும். அதனால்தான் பகலில் மறைந்து திரியும் பூச்சி "கரப்பான்" எனப்பட்டது. உள்ளத்தால் ஒன்றை மறைக்கும் "வஞ்சனை"யும், சொல்லால் ஒன்றை மறைக்கும் "பொய்"யும், மறைவாக ஒன்றைக் கவரும் "திருட்டு"ம் "கரவு" எனப்பட்டன. திருடர்கள் "கரவடர்" எனப்பட்டனர்.

அதுபோல ஞாயிறும் திங்களும் வானில் மறைபடும் நிகழ்வு "கரவணம்" எனப்பட்டது. இந்தக் "கரவணம்" என்ற சொல்தான் "கரகணம்" எனத் திரிந்து வடமொழியில் "கிரகணம்" என்று வழங்கிவருகிறது.

Sunday, September 14, 2008

வாள்

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி என்று தமிழ் மக்களைப் புறப்பொருள் வெண்பா மாலை புகழ்ந்து பேசும்.மலையிலிருந்து மண் தோன்றும் முன்னாலேயே வாளோடு-வீரத்தோடு-பிறந்தவர் தமிழர் என்று இதற்குப் பொருள் கொள்கிறோம்.ஆனால் இந்தக் கருத்து எல்லார்க்கும் உடன்பாடானதாக அமையவில்லை.சிலர்க்கு இது உயர்வு நவிற்சியாகத் தெரிகிறது.இந்தப் பாடல் வரியில் `வாள்`என்ற சொல்லுக்குப்`பேச்சு`என்னும் இன்னொரு பொருளும் உண்டு.அதன் அடிப்படையில் இந்த வரி,மலை தோன்றி மணல் தோன்றும் முன்பே -பேச்சோடு-தமிழ்மொழியோடு பிறந்தவர் தமிழர் என்று பொருள்படுகிறது.இது மிகப் பொருத்தமானதாகவும் அமைகிறது.

வாள்=1.சொல்லுகை(தொல்.எழுத்து.0.உரை) .பிறரால் சொல்லப்படும் புகழ்."வளைய வாளரா மீது"(தக்கயாகப்.௧௧௧.உரை).

வாள்தல்=சொல்லுதல்,பேசுதல்.

வாளாவிருத்தல்=பேசாது அமைதியாய் இருத்தல்.

வாய்வாளாமை=வாய் pesaamai. (மௌனம்).

வாள்+கு=வாட்கு->வாக்கு.

வாக்கு=வாய்ச்சொல்,புகழ்ச்சிச்சொல்.

SKT.voc.LATIN.vox,vocis.ENG.vocal.

வாளோடு புகழோடு- பிறந்தவர் தமிழ்ர் என்பது உண்மைதானே.

Saturday, May 10, 2008

முதலுக்கு முதல்

முதலாகப் பிறந்தவளே மூத்தவளே முதுமொழியே ! உனக்கு
முதலாகும் படைப்புக்களை மொழியவரும் இதழ் இதுவே.