Sunday, September 27, 2009

கத்துதல்

"கத்துதல்" என்ற சொல்லின் பொருள் என்ன? என்று கேட்டால் "உரக்க ஒலி
எழுப்புதல்" என்று எளிதாகச் சொல்லிடுவோம். ஏனென்றால், பறவைகளும்
விலங்குகளும் உரக்க ஒலி எழுப்புவதனையும் கடல் உரத்து முழங்குவதையும்
மாந்தர்கள் உரக்கக் கூப்பிடுவதையும் உரக்க ஓதுவதையும் உரக்கப் பேசுவதையும் உரக்கத் திட்டுவதையும் "கத்துதல்" என்றுதான்
குறிப்பிடுகிறோம்.

ஒரு நிகழ்வை அல்லது செய்தியை அல்லது வரலாற்றைத் தம்மைச்
சுற்றியிருப்பவர்களிடம் உரத்த குரலில் ஒருவர் கத்திச் சொல்வது அந்தக்
காலத்தில் "கதை" என்று அழைக்கப்பட்டது.
கத்து -> (கது) ->கதை.
கதை சொல்வதுபோல நீண்ட நேரம் பேசிக்கொண்டிருப்பதை நெல்லைப் பகுதியில் "கதைபேசுதல்" என்பார்கள். இந்தச் சொல்தான் "கதைத்தல்" என்ற சொல்லாக உருமாறியுள்ளது.

கதை -> கதைத்தல்.

கதைத்தல் = கதைபேசுவதுபோல் நெடிது பேசுதல், பேசுதல் (யாழ்.வழக்கு) ,
சொல்லுதல் (திவாகரம்).

கதைதல் = உரக்கச் சொல்லுதல், சிறப்பித்துச் சொல்லுதல்.
கத்து -> (கது) -> கதித்தல்.

கதித்தல் = உரத்த குரலில் ஆணையிட்டுச் சொல்லுதல்.
கத்து ->; (கது) -> கதறு.
கதறுதல் = மாந்தர்கள் உரக்க ஒலி எழுப்பி அழுதல், கால்நடைகள் கத்துதல்.

"கத்துதல்" என்னும் சொல்லிற்கு வேறு பொருள்களும் உண்டு. அவை குத்தி
அறுத்தல் வெட்டுதல் நறுக்குதல் என்பனவாம்.

"குத்துதல்", "கொத்துதல்" ஆகிய சொற்கள் இந்தக் "கத்துதல்" சொல்லோடு தொடர்பு உடையவை.

காது குத்துவதுபோல, கத்தியால் குத்துவதுபோல, உள்துளைத்துக் குத்துவது
குத்துதல் எனப்படும். உடம்பைத் துளைப்பதுபோல் கைமுட்டியை மடக்கித்
தாக்குவதும் மாடு முட்டுவதும் உரலில் உலக்கையால் குத்துவதும் குத்துதல்
எனப்படும். குத்துவதால் உண்டாகும் வலிபோல உடம்பில் தோன்றும் நோவும்
குத்து எனப்படும். எ-டு : தலைக்குத்து. மனம் நோகும்படிப் பேசுவதும்
குத்துதல் எனப்படும். எ-டு : குத்திப்பேசுதல், குத்திக்காட்டுதல்.

மண்வெட்டியால் நிலத்தைக் கிண்டுவதும், பறவைகள் அலகால் கொத்தித்
தின்னுதலும், பாம்பு கடித்தலும், எழுத்து முதலியன செதுக்குதலும்
"கொத்துதல்" எனப்படும்.

குத்துதல் என்பது ஆழமாகத் துளைப்பதுபோல் குத்துவதையும் கொத்துதல் என்பது மேலாகக் குத்துதையும் குறிக்கும். கோழி தவசங்களைக் கொத்தியெடுப்பதையும் கொக்கு மீன்களைக் குத்தியெடுப்பதையும் ஒப்பிட்டு உணர்க. இவற்றிற்கு இடைப்பட்ட நிலை "கத்துதல்" என்பதாம்.

குத்து -> கொத்து -> கத்து.
கத்துதல் = குத்தி வெட்டுதல், குத்தி நறுக்குதல்.
கத்து -> கத்தி = குத்தி வெட்டும் அல்லது அறுக்கும் கருவி.
கத்தி + அரி = கத்தரி.
கத்தரித்தல் = கொஞ்சங்கொஞ்சமாய் வெட்டியரித்தல்
(திவாகரம்),அறுத்தல்.வெட்டி விலக்குதல், நட்புப் பிரித்தல், கிளைகளாய்ப்
பிரிதல்
.
கத்தரி = கத்தரிக்கோல். கத்தரி -> கத்தரிகை = கத்தரிக்கோல்.
கத்தரி -> கத்தரிப்பான் = கத்தரிக்கோல்.
கத்தரி -> கர்த்தரீ (சமற்கிருதம்).

கத்து -> கத்தல் = கறியைக் கொத்துதல் (குமரி மாவட்ட வழக்கு).
கத்து -> கத்தாப்பு = கறியைக் கொத்தித் தருதல்.
கத்தாப்பு -> கச்சாப்பு -> கசாப்பு (உருது).
கத்து -> காட் (இந்தி), ME. cutte, SW. kata, E. cut.

Monday, August 17, 2009

கொல்லை

பண்டைக் காலத்தில் முல்லை நிலத்திருந்த வானவாரிக் காடுகள் "கொல்லை"
எனப்பட்டன. புதிதாக உருவாக்கிய கொல்லை "இதைப்புனம்" என்றும் நெடுநாட்களாக
வேளாண்மை செய்துவரும் பழைய கொல்லை "முதைப்புனம்" என்றும் அழைக்கப்பட்டன.
காடும் காடு சார்ந்த இடமும் முல்லை நிலமாகும். எனவே, 'முல்லை நிலக்
காடுகளைக் கொன்று (அழித்து) உருவாக்கிய நிலம் கொல்லை' என்று அறிஞர்
சிலர் கருதுகின்றனர். இக் கருத்து சரியானது அன்று.


"கொல்லுதல்" என்னும் சொல்லிற்கு 'அழித்தல், வெட்டுதல்' ஆகிய பொருள்களோடு
'உழுதல்' என்ற பொருளும் உண்டு. "முதைப்புனம் கொன்ற ஆர்கலி உழவர்"
(குறுந்தொகை.155) "விதையர் கொன்ற முதையல்" (நற்றிணை.121) ஆகிய செய்யுள்
வரிகளில் "கொன்ற" என்னும் சொல், 'உழுத, உழுது பண்படுத்திய' என்ற பொருளில்
வருதல் காண்க. அதனையொற்றி, உழுவதற்குப் பயன்படும் உழுபடையும், "கொழு"
என்றும் "காறு" என்றும் பெயர்பெற்றன.
கொல் -> கொழு.
கொல் -> (கோறு) -> காறு.
ஒ.நோ : கொல் + தல் = கோறல்.
காறு - OE.scear. ME.schar. E.share.
GERMAN.schar,schaar.

Wednesday, July 29, 2009

கூத்து

இயல், இசை, நாடகம் என்பன முத்தமிழ். அவற்றுள் நாடகத் தமிழ் கூத்து,
நடனம், நாடகம் என மூன்று வகைப்படும். நடனத்திற்கும் நாடகத்திற்கும்
அடிப்படையாய் அமைந்தது கூத்து. அது வேத்தியல் கூத்து -பொதுவியல் கூத்து,
உலகியல் கூத்து - தேவியல் கூத்து, வசைக் கூத்து - புகழ்க் கூத்து,
அமைதிக் கூத்து - வேடிக்கைக் கூத்து, அரங்கக் கூத்து - தெருக் கூத்து
எனப் பல்வேறு வகையில் இரண்டிரண்டாக வகைப்படுத்தப்படும்.


"குதித்து ஆடுவது கூத்து" என்பார் பாவாணர். தெருக்கூத்து, கதைக்களி,
யட்சகானம் ஆகியவற்றில் நடிப்போர் குதித்தாடுதல் நோக்கி அவர் இவ்வாறு
கூறியிருக்கலாம்.


"குத்துதல்" என்ற சொல்லுக்குப் பல பொருள்களை அகரநிரலி (lexicon)
தருகிறது. அவற்றுள் இடம்பெறாத ஒரு பொருள் "தரையைக் குத்தி ஆடுதல்"
என்பதாம். இந்தப் பொருளில் இச் சொல் இன்றும் மக்கள் வழக்கில்
வழங்கிவருகிறது. கல்லாத எளிய மக்கள் நன்றாய் ஆடுபவனை "எப்படிக்
குத்துகிறான் பார்" என்று வியந்து பாராட்டுகின்றனர். தப்பை இசைக்கேற்ப
ஆடும் ஆட்டத்தைத் "தப்பாங்குத்து" (டப்பாங்குத்து) என்றே வழங்குகின்றனர்.
ஆடுபவர்களை தப்பாங்குத்து குத்தச் சொல்லிக் கண்டு மகிழ்கின்றனர்.

இந்தக் "குத்து" என்ற சொல்லிலிருந்துதான் "கூத்து" என்னும் சொல்
தோன்றியுள்ளது. குத்து -> கூத்து.

Sunday, June 28, 2009

அற்றுப்போதல்

"ஓட்டிக்கு அப்புறம் உறவற்றுப் போயிற்று" என்பது தென்னாட்டில் வழங்கும்
பழமொழி. இதன் பொருள் என்ன?


ஒன்பது தலைமுறை முறைப் பெயர்களைக் கொண்டது தமிழினம். அவையாவன, ஓட்டன் -
ஓட்டி, பூட்டன் - பூட்டி, பாட்டன் - பாட்டி, தாத்தா - தாத்தி
(ஐயாம்மை/மாமம்மை) அப்பா -அம்மா, மகன் - மகள், பெயரன்(பேரன்) - பெயர்த்தி
(பேர்த்தி -> பேத்தி), கொள்ளுப்பெயரன்(கொட்பெயரன்) - கொள்ளுப்பெயர்த்தி,
எள்ளுப்பெயரன் -எள்ளுப்பெயர்த்தி என்பனவாம். இவற்றுள் "தாத்தி" என்ற சொல்
வழக்கற்றுப்போக (ஆய்+அச்சி -> ஆய்ச்சி ->) ஆச்சி, (ஆய் + ஆய் -> ஆயாய்
->) ஆயா முதலான சொற்கள் சில பகுதிகளில் வழங்குகின்றன.


உறவுமுறை வரிசையில் மிகத் தொலைவாக இருக்கும் உறவு என்பதனால் ஓட்டன்,
சேயோன் (-> சேயான் -> சீயான்) எனப்பட்டார். ஓட்டி, "சேயோள்" எனப்பட்டார்.
குடும்ப முதல்வர்களாக அவர்கள் கருதப்பட்டனர். அதனாலேயே, வாங்கிய கடனைத்
திருப்பித் தராமல் இருப்பவர்களிடம், "வாங்கிய கடனை உன் சீயானா (சேயோனா)
வந்து தருவார்?" என்று கேட்பது தென்னாட்டு வழக்கமாய் இருக்கிறது. ஓட்டன்
- ஓட்டியோடு உறவு முடிந்துபோகிறது என்பதைக் குறிக்க எழுந்ததே "ஓட்டிக்கு
அப்புறம் உறவு அற்றுப்போயிற்று" என்ற பழமொழி.


இப் பழமொழியில் "அற்றுப்போதல்" என்ற சொல்லின் பொருள் 'முழுமையாய்
நீங்குதல்' என்பதேயாம். இதில் "அற்று" என்பது "அறு" என்ற சொல்லின் இறந்த
கால வினையெச்ச வடிவமாகக் காட்டப்பட்டுள்ளது. "அறு" என்ற சொல்லிலிருந்து
"அறுந்து", "அறுத்து" ஆகிய வடிவங்களே எழும்.'பெறு -> பெற்று என்பதுபோல்
பகுதி இரட்டித்துவந்தது' என்று கூறுதல் பொருந்துவதாக இல்லை.


தென்னாட்டில் இன்றும் வழக்கத்தில் "அல்"(லுதல்) என்ற அகரமுதலிகளில்
இடம்பெறாத சொல் உள்ளது. கயிற்றை "அல்லு", "அற்றிடு" (அத்திடு) என்றால்
கயிற்றை 'அறு', 'அறுத்துவிடு' என்பதே பொருளாகும். கல் (கற்றல்), வில்
(விற்றல்) ஆகிய சொற்களைப் போலவே, அற்றான், அற்கிறான் (அக்கிறான்),
அற்பான் என்று புடைபெயர்ச்சி கொள்ளும் இச் சொல்லின் இறந்த கால வினையெச்ச
வடிவமே "அற்று" என்பதாம்.

Wednesday, May 6, 2009

குரவம்

'பெருமை' என்று பொருள்படும் பழந்தமிழ்ச் சொல் இது. கழக இலக்கியங்களில் "குரை" என்ற வடிவில் வழங்கியுள்ளது. "ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே" என்னும் ஐங்குறுநூற்றுப் பாடல் வரியில் "குரை" என்ற சொல் 'பெருமை' என்று
பொருள்படுகிறது.

குரை -> குரவு -> குரவம் = பெருமை.
குரவு -> குரவர் -> பெரியோர்.
தாய்தந்தையர் "இருமுதுகுரவர்" (சிலம்பு) எனப்படுதலையும், அரசன் ஆசிரியன்
தாய் தந்தை அண்ணன் ஆகிய ஐவரும் "ஐங்குரவர்" என்று அழைக்கப்படுதலையும் காண்க.

இந்தக் "குரவம்" என்ற சொல்லை வடசொல்லாக ஆக்க விழைந்தோர், 'உகர ஊகாரங்களை ஔகாரமாக்குதல்' என்னும் நெறியைப் பயன்படுத்தி, "கௌரவம்" ஆக்கிவிட்டனர். நாமும் வடசொல் என மருண்டுபோய்விட்டோம்.

இத்தகைய மருட்சி வினைக்கு இக்காலத்தில்கூட நல்லதொரு சான்றைக்
காட்டமுடியும். PHYSICS என்ற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்த்தவர்கள்,
'ஐம்பூதங்களின் இயல்புகளை எடுத்துரைக்கும் அறிவியல்' என்று பொருள்படும்வகையில் "பூதிகம்" என்ற சொல்லைப் புனைந்தனர். இந்தச் சொல்லின் தமிழ் மணத்தைத் தாங்கமுடியாத வர்கள், 'உகர ஊகாரங்களை ஔகாரமாக்குதல்' என்னும் நெறியைப் பயன்படுத்தி, பூதிகம் -> பௌதிகம் என உருமாற்றி உலவவிட்டனர். நாமும் மருண்டுபோய் வேறு சொல்காணத்தொடங்கி, இன்றைக்கு "இயற்பியல்" என்ற சொல்லை ஏற்றுக்கொண்டுள்ளோம். இதனைப் பூதிகம் என்றே பொருத்தமுற வழங்கலாம்.

Tuesday, May 5, 2009

நாம்

தொல்காப்பியத்தில் வழங்கும் மிகத் தொன்மையான சொல் இது. இதன் மூலச்சொல் "நா" (நாக்கு) என்பதாம். நாலும் (தொங்கும்) உறுப்பு "நா" எனப்பட்டது.

முற்கால மாந்தர் நாக்கினைக் கண்டு அஞ்சியுள்ளனர் என்பதனை இச் சொல் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. நாக்கை நீட்டிக்கொண்டிருக்கும் உயிரிகளான நாயையும் நாகத்தையும் மட்டும் அல்லாமல் நா நீட்டி அலைவதாகக் கருதிய பேயையும்
நினைத்து அஞ்சிய மக்கள் நாவிற்கே அச்சப் பொருள் கொண்டுவிட்டனர். அதனால்தான், கொழுந்துவிட்டு எரியும் தீச்சுடர்களைத் "தீநாக்குகள்" என்று அச்சத்தோடு அழைக்கின்றனர்.

நா + அம் = நாம் (=அச்சம்)
நாம் + அம் = நாமம் (=அச்சம்)

இன்றும் கண்ணெச்சிலுக்காக வைக்கப்படும் பொம்மைகள் நாக்கை நீட்டி அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்படுதல் காண்க.

நாயும் நாகமும்கூட நாவினால் பெயர்பெற்றவையே.

நா + இ = நாஇ -> நாயி -> நாய்.
நாவு + அம் = நாவம் -> நாகம்.

Wednesday, April 1, 2009

ஒட்டியாணம்

பெண்கள் இடுப்பில் அணியும் பொன் அணிகளுள் ஒன்று ஒட்டியாணமாகும். இதன்
பழைய பெயர் "உடைஞாண்" என்பதாம். ஆண்கள் அரைஞாண் அணிதல்போலப் பெண்கள் அக்
காலத்தில் உடைஞாண் அணிந்திருந்தனர். ஆனால் உடைஞாண் பெரும்பாலும் பொன்னால்
செய்யப்பட்டதால் "உடைஞாணம்" எனப்பட்டது. "உடைஞாணம்" பேச்சுவழக்கில்
"உடையாணம்" என்று திரிந்து வழங்கியது.

"உடையாணம்" என்ற சொல் கன்னட தெலுங்கு மொழிகளில் "ஒடையாணம்" என்று மருவி,
"ஒட்யாணம்" என வழங்கத் தலைப்பட்டது. "ஒட்யாணம்" என்ற சொல்தான் இலக்கண
அமைதி பெற்று "ஒட்டியாணம்" என்று தமிழில் வழங்குகிறது. இன்றும் மலைஞால
மொழியில் "உடைஞாண்" என்றே உண்மையான வடிவில் வழங்குகிறது!

தாறு

தொன்றுதொட்டுப் பயன்பாட்டில் இருந்துவரும் உடுப்பு வகைகளுள் ஒன்று தாறு.தற்று உடுத்தப்படும் ஆடை என்பதனால் தாறு எனப்படுகிறது. தறுதல் என்றால் "இறுக்கிக் கட்டுதல்" என்பது பொருள். "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்" என்ற குறட்பாவில் (1023) இச் சொல் பயின்றுவந்துள்ளது.

தமிழர் கண்ட உடைவகையே தாறு என்பதையும் இக் காலப் பார்ப்பனர்கள் கட்டும் பஞ்சக்கச்சமும் ஒருவகைத் தாறே என்பதையும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார். இந்தத் தாறு என்ற சொல்லை, மராத்தி மொழி
"தாதி" என வழங்குகிறது. இதனை மேலும் திரித்து வட இந்திய மொழிகள் "தோ(த்)தி" என வழங்குகின்றன.

தற்று உடுக்கப்படும் பெண்களின் ஆடை "தற்றாடை" (தட்டாடை) என வழங்கும். பார்ப்பனப் பெண்கள் இக் காலத்தில் கட்டும் "மடிதாறு" (மடிசார்)கூட ஒருவகைத் தற்றாடையே! இலங்கையில் சிங்களப் பெண்கள் கட்டும் இருபது முழம் சேலை "தற்றுடுப்பு" (தட்டுடுப்பு) என்றே அழைக்கப்படுகிறது. கால்களைச் சுற்றிச் சுரிந்து கட்டப்பட்ட வடநாட்டுப் பெண்களின் தற்றாடை இக்
காலத்தில் பையாடையாக மாறிவிட்ட பின்னரும் "சுரிதாறு" (சுரிதார்) என்றே அழைக்கப்படுகிறது!

அரையில் அணியும் உள்ளாடைகள் அக்காலத்தில் "தற்றி" எனப்பட்டன. கன்னடம், துளு, போன்ற திரவிட மொழிகள் இச் சொல்லைத் "தட்டி" என வழங்குகின்றன. தமிழர்களாகிய நாமோ "தட்டி"யையும் "ஜட்டி"யாக மாற்றி வழங்கிவருகின்றோம்.
இனிமேலாகிலும் "தற்றி" (தட்டி) எனச் செவ்வையாய் வழங்குவோமா?