Thursday, February 9, 2023

துல் என்னும் வேர்ச்சொல் - முன்வருதல் கருத்து வேர்


துல் என்னும் வேர்ச்சொல்
(முன்வருதல் கருத்து வேர்)

[வேர்ச்சொல் கட்டுரைகள் நூலில் பாவாணர் எழுதாது விட்ட கட்டுரை இது. அவரை முழுமையாகப் பின்பற்றி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. பல மூலங்கள் அவர் கண்டு காட்டியவையே!] 

தமிழ்ச் சொற்களின் மூலம் கண்ட தமிழ்மூலர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். உல் என்னும் விதைச்சொல்லும் குல், சுல், துல், நுல், புல், முல் ஆகிய வேர்ச் சொற்களும் எண்பெருங்கருத்துகளின் அடிப்படையில் இயங்கித் தமிழின் பெரும்பான்மையான சொற்களைத் தோற்றுவித்துள்ளன என்பார் பாவாணர். 

'துல்' என்பது  முன்வருதல்  பொருண்மையுடைய வேர்ச்சொல். 
துல் → தெல் = முன்வைத்துள்ள காய்களைத் தெறித்து விளையாடும் விளையாட்டு, தெல் தெறிக்கப் பயன்படும் கழற்சிக் காய். 

துல் → துள் 
துள் → துள்ளு. 
துள்ளுதல் = 1. எம்பிக் குதித்தல். "துள்ளித்தூண் முட்டுமாங்கீழ்" (நாலடி.64) 2. தாவிச் செல்லுதல். “துள்ளு மான்மறி ஏந்திய செங்கையில்" (தேவா, 93,5) 3. உடல் பதைத்தல். "துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து". (கலித்.4) 4. பொங்குதல், மிகுதல், "அனையது கேட்டலோடு மறிஞர்கள் மகிழ்ச்சி துள்ள" (திருவானைக். நைமி. 28) 5. மனச் செருக்கினால் துள்ளுதல். "துள்ளுகின்றார் கூட்டமுறேல்" (அருட்பா,1,நெஞ்சறி,635) 
ம. துள்ளுக. க. துள்ளு. து. துள்ளுனி குடகு. துள். தெ த்(ரு)ல்லு. 

துள்ளு = 1. குதிப்பு 2. செருக்கு. "துள்ளுவார் துள்ளடக்கும் தோன்றலே" (அருட்பா,2,அருட்டிறத்,7) தெ. துள்கு 

துள் → துள்ளி = துள்ளி வரும் நீர்த்திவலை. "வானத்தின் துள்ளியல்லால்" (மேருமந்.121). ம.துள்ளி 

துள்ளி → துள்ளம் = துளி. "துள்ளஞ்சோர" (திவ்.பெரியாழ், 5,1,7) 
துள்ளி → துளி = 1.நீர்த் திவலை 2. ஒரு சிற்றளவு. 
ம. துளி, க. துளகு, தெ, தொளுகு குடகு. தொள்க, துடவம். தொளி, கோண்டு. துளி, பாஞ்சோ. தொள்க. 

துளித்தல் = (செ.கு.வி) 1 துளித்துளியாய் விழுதல் "மதுவந் துளிக்கும் சோலை" (தேவா. 395.4) 2.  மழை பெய்தல் "மங்கு வற்கமொடு பொங்குடி துளிப்ப* (அகநா. 235) (செ.குன்றா.வி) துளியாய்த் தெளித்தல்.
ம. துளிக்க. 

துள் → துள்ளல் = 1. துள்ளுகை. "பேயும்பேயும் துள்ளல் உறுமென" (கலித்.94) 2. துள்ளியாடும் கூத்து. 3. சந்தத்தின் முடுகிசை 4. கலிப்பாவிற்குரிய துள்ளல் ஓசை. (காரிகை.செய்.1) 5. கூத்தாடும் கூத்தன்  6. துள்ளத் துடிக்க வைக்கும் ஆட்டு நோய் வகை. 
துள்ளல் செலவு = யாழ் வாசிப்பு முறையுள் ஒன்று. "குடகச் செலவும் துள்ளல் செலவும்" (சீவக.657உரை) 
துள்ளாட்டம் = 1. களிப்பு 2. செருக்கு. 

துள் → துளும்பு. 
துளும்புதல் = 1. துள்ளுதல் (சூடா) 2. ததும்புதல், "துளும்பு கண்ணீருள் மூழ்கி" (திருவிளை. மாணிக்க.துதி) 3.  மேல் எழுதல் "தூர் துளும்ப (சீவக.1674) 4. அசைதல். "வம்பிற் றழும்புமுலை வாணெடுங்கண் மடவார்" (மேருமந். 121) ம. துளும்பு, க. துளுகு. 

துளும்பு → தளும்பு 
தளும்புதல் = கலம் அசைவதால் நீர் சிறிது துள்ளுதல். 

துளும்பு → துடும்பு
துடும்புதல் = ததும்புதல் 'துடும்பல்வேலை துளங்கிய" (கம்பரா.சேதுபந்தன.59) 

துள் → தெள். தெள்ளுதல் = 1. கொழித்தல். 2. அலை கொழித்தல், "கரி மருப்புத் தெள்ளி" (திருக்கோ.128) 
ம. தெள்ளுக. 

தெள் → தெளி. 
தெளித்தல் = துளிதுளியாய்ச் சிந்துதல் "நறுவிரை தெளித்த (அகநா. 196) 2. விதைத்தல், 3. கொழித்தல். 

தெளி → தெறி. 
தெறித்தல் = ( செ.குன்றா, வி) 1. துளி துள்ளி விழுதல், "முத்தின் முகிழ்முலைத் தெறிப்ப" (அகநா.289) 2. மேல்படுதல். "மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே" (சிலப்.20,72)
(செ.கு.வி) விரலால் சுண்டுதல், விரலால் உந்துதல், "சிலையை நாண் தெறித்தான்" (கம்பரா.தேரேறு.29) 

துள் → துரு. 
துருத்துதல் = முன் தள்ளுதல் 
துருத்து → துருத்தி = 1. காற்றை முன்தள்ளும் கொல்லுலைத் தோற்கருவி. "கொல்லன் விசைத்துவாங்கு துருத்தியின்" (அகநா.224) 2. துருத்தி போன்ற தோற்பைக் குழல். 3. முன்தள்ளிய வயிறு. 

துரு → தூர். 
தூர்த்தல் = முன்னால் பெருக்கித் துப்புரவு செய்தல். "சினகராலயம்  தூர்ப்பது திருமெழுக்கிடுதல்" (உபதேசகா.சிவபுண்ணிய, 50) 

தூர் → தூரம் = 1. தள்ளி நிற்கும் தொலைவு. 2. தள்ளிய உறவு, 3. சேய்மை. 
சில குலத்துப் பெண்கள் மாதவிலக்கினை வீட்டுக்குத் தூரம் என்று குறித்தல் காண்க. 
தூரத்துச் சொந்தம், தூரத்து உறவு, தூரத்துச் சுற்றம், தூரத்தார், தூரப்பார்வை (×கிட்டப் பார்வை), தூரப் போதல், தூரஇருத்தல் முதலான கூட்டுச்சொற்கள் தூரம் என்னும் சொல் தமிழே என்பதை எண்பிக்கும். நெடுந்தொலைவு செல்பவரைத் தூரவா போகிறீர்கள் என்று வினவுவதை எண்ணுக. தூரம் என்ற தமிழ்ச் சொல்லை dhuram என்று பலுக்குவதால் அது வடசொல் என்று கருதப்படுகிறது. 

துள்ளு → தள்ளு. 
தள்ளுதல் = 1.முன்தள்ளுதல் 2, (தோணியை) முன் செலுத்துதல். 3. தூண்டுதல். "காண்டுமென் றறிவு தள்ளி" (கம்பரா.சம்பா.54) 
ம. தள்ளுக. க. தள்ளு, து தள்ளுனி தெ, தள்கு, கோண்டு. தள், 
குலை தள்ளுதல், வயிறு தள்ளுதல் என்ற வழக்குகளை நோக்குக. 

துள் → (துட்பு) → துப்பு 
துப்புதல் = வாய் வழியாக எச்சிலையோ சளியையோ நீரையோ வெளித்தள்ளுதல். 
துப்பு → துப்பல் = எச்சில். 
துப்பு → துப்பணி = 1. துப்பிய எச்சில் 2. எச்சில் துப்ப உதவும் சாம்பல் அல்லது மணல் நிரப்பிய கொட்டான். 

துள் → துன். 
துன் → துன்னல் = துளி. "அன்னலுந் துன்னலுமாகவிட்டு" (ஈடு, 6,2,10) 

துன் → தும். 
தும் → துமி = நீர்த்துளி, மழைத்துளி.
தும் → தும்பல் = சிறு மழை. "மழை தூறலும் தும்பலுமாய் இருக்கிறது" (உ.வ) 
தும் → தும்மு. 
தும்முதல் = மூக்குவழியாய்க் காற்றைத் தள்ளுதல். "ஊடியிருந்தேமாத் தும்மினார்" (குறள் 1312) 

தும்மு → (துவ்வு) → துவு→ துவல். 
துவல்(லு)தல் = துளித்தல், தெளித்தல்,
துவல் → துவலை = துளி. "சிதரலந் துவலை தூவலின்" (அகநா.24) 

துவல் → துவறு. 
துவறுதல் = மழை தூவுதல். 
துவறு → தூறு. 
தூறுதல் = மழைத்துளி விடுதல். 
ம. தூறு, க. தூறு, தெ. தூறு. 
துவறு → துவற்று. 
துவற்றுதல் = மழை தூவுதல். 
துவற்று → தூற்று 
தூற்றுதல் = 1. பதரையும் மணியையும் பிரித்தற்குக் கூலத்தை முன்னாக வாரியிறைத்தல். "கால்வரத் தூற்றி" (சேதுபு.நிருநாட்.74) 2. சிதறுதல். "தென்ற றூற்றும் குறுந்திவலை" (கம்பரா.கடல்காண்.5) 3. மண்ணை வாரி இறைத்தல் 4. பழிச் சொற்களைப் பரப்புதல். "சிறுகாற் செல்வன் மறுகில் தூற்ற" (சிலப். 4.18) 5. வீண் செலவு செய்தல். 
ம. தூற்றுக க. தூறு. 
தூற்று → தூற்றல் = 1. மழைத்துளி 2.பழிச்சொல். ம. தூற்றல். 

துவ்வு  → தூவு. 
தூவுதல் = 1. தெளித்தல். "நன்னீர் தூய்" (திவ்.திருவாய்.1.6.1) 2. இறைத்தல் 3. மிகச் சொரிதல் "வெங்கணை தூவி" (சீவக.453) 4. சிறிது சிறிதாய் மேற்பெய்தல். "தூப எமலர் தூவி" (தேவா.542;3) 
தூவு → தாவு. .
தாவுதல் = தாண்டுதல், "கடல்தாவு படலம்" (கம்பரா). ம. தாவுக  

துவ்வு → தவ்வு. 
தவ்வுதல் = தாவுதல். "தவ்வு புனல்" (திருவாலவா.30:32) 
தவ்வு = பாய்ச்சல் 
தவ்வு → தவு 
தவு → (தவள்) → தவளை = தவ்விச் செல்லும் உயிரி. “தவளைத் தண்டுறை கலங்கப் போகி" (பெருங்.மகத.3,21) 

தவள் → (தவட்கை) → தவக்கை = தவளை. (நெல்லை வழக்கு) 
தவக்கை நீச்சல் = மல்லாந்த நிலையில் அடிக்கும் நீச்சல். 
இச் சொல்லே தவக்கா(ய்) என்றும் தவக்களை என்றும் திரிந்து வழங்குகிறது. 

தவு→ தவழ். 
தவழ்தல் = 1. தத்திச் செல்லுதல், 2. தத்துதல். "ஓதங் கரைதவழ் நீர்போல்" (பு.வெ.8;9) 

தும் → துந்து. 
துந்து → துந்தி = முன் தள்ளிய வயிறு (தைலவ.தைல.90) 2. கொப்பூழ் 
துந்தி → தொந்தி = முன் தள்ளிய வயிறு.  ம.தொந்தி. 

துந்து  → துத்து. 
துத்து  → தத்து. 
தத்துதல் = 1. குதித்தல். "தத்தாவுறு தடந்தேரினை" (கம்பரா.நிகும்பலை.121) 2. தாண்டுதல் "ஞாலந் தத்தும் பாதனை" (திருவிருத்.79) 3. தாவிச் செல்லுதல். தத்திப் புகவரும் பொங்குளைப் புள்ளியன் மாவும்" (பரிபா.10,14) 4. தாவி ஏறுதல். "ஏற்றுப் பிணரெருத்திற் றத்துப" (கலித்.168 : 34) 5.ததும்புதல். "தத்து நீர்க்கடல்" (கம்பரா.படைத்தலைவ.54)  6. பரத்தல். "தத்தரி நெடுங்கண்" (மணி.2,7) 7. ஒளி முதலியன தெறித்தல். "தத்தொளி மணிமுடி" (சீவக.144) 

துத்து  → துது → தூது. ஒ.நோ : கது → காது. 
தூது = 1. முன்சென்று உரைக்கும் செய்தி. 2. தூது மொழி. "தூதுரைப்பான் பண்பு" (குறள் 681) 3.தூது செல்வோன். "தக்க தறிவதாந் தூது" (குறள் : 686) 4. அரசத் தூதர் தன்மை (குறள் 69. அதிகாரம்) 5. காமக் கூட்டத்துக் காதலரை இணக்கும் செயல். “தூது செய் கண்கள் கொண்டொன்று பேசி" (திவ்.திருவாய். 9,9,1) 5. செய்தி, "தொட்டு விடுத்தே னவனைத் தூது பிற சொல்லி" (சீவக 1876). 6. ஒரு சிற்றிலக்கிய வகை. 
ம. தூது, க. தூது, தெ. தூத. 
 அரசரும் காதலரும் ஒருவர் ஓருவரிடைச் செல்வதை முன்  அறிவித்தற்காக விடுக்கும் செய்தியே முதன்முதல் தூது எனப்பட்டது. கண்ணன் தூது, அங்கதன் தூது முதலியவற்றை நோக்குக. பிற்காலத்தில் செய்தி அறிவிப்பது என்று மட்டும் பொருள்பட்டது. 

தூது → தூதன், தூதுவன் தூதாள் (= தூது செல்பவன்) 
தூது → தூதி, தூதிகை (= தூது செல்பவள்)
தூதிற் பிரிவு அகப் பொருட் பிரிவு வகையுள் ஒன்று. தூதிடையாடலும் தூதுவென்றியும் புறத்துறை வகைகள்.
தூது →  தூதர் = ஒரு நாட்டின் படிநிகராளியாக மற்றொரு நாட்டிற்கு அனுப்பப்படும் அரசு உயர் அதிகாரி Ambassador. 
தூதர் → தூதரகம் = தூதரின் அலுவலகம். Embassy. 
தூதுக்குழு → விடைமுகர் குழு (Delegates) 
தூதஞ்சல் = நேரில் சென்று  கொடுக்கும் தனியார் அஞ்சல் courier.