Wednesday, April 1, 2009

ஒட்டியாணம்

பெண்கள் இடுப்பில் அணியும் பொன் அணிகளுள் ஒன்று ஒட்டியாணமாகும். இதன்
பழைய பெயர் "உடைஞாண்" என்பதாம். ஆண்கள் அரைஞாண் அணிதல்போலப் பெண்கள் அக்
காலத்தில் உடைஞாண் அணிந்திருந்தனர். ஆனால் உடைஞாண் பெரும்பாலும் பொன்னால்
செய்யப்பட்டதால் "உடைஞாணம்" எனப்பட்டது. "உடைஞாணம்" பேச்சுவழக்கில்
"உடையாணம்" என்று திரிந்து வழங்கியது.

"உடையாணம்" என்ற சொல் கன்னட தெலுங்கு மொழிகளில் "ஒடையாணம்" என்று மருவி,
"ஒட்யாணம்" என வழங்கத் தலைப்பட்டது. "ஒட்யாணம்" என்ற சொல்தான் இலக்கண
அமைதி பெற்று "ஒட்டியாணம்" என்று தமிழில் வழங்குகிறது. இன்றும் மலைஞால
மொழியில் "உடைஞாண்" என்றே உண்மையான வடிவில் வழங்குகிறது!

தாறு

தொன்றுதொட்டுப் பயன்பாட்டில் இருந்துவரும் உடுப்பு வகைகளுள் ஒன்று தாறு.தற்று உடுத்தப்படும் ஆடை என்பதனால் தாறு எனப்படுகிறது. தறுதல் என்றால் "இறுக்கிக் கட்டுதல்" என்பது பொருள். "குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்" என்ற குறட்பாவில் (1023) இச் சொல் பயின்றுவந்துள்ளது.

தமிழர் கண்ட உடைவகையே தாறு என்பதையும் இக் காலப் பார்ப்பனர்கள் கட்டும் பஞ்சக்கச்சமும் ஒருவகைத் தாறே என்பதையும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார். இந்தத் தாறு என்ற சொல்லை, மராத்தி மொழி
"தாதி" என வழங்குகிறது. இதனை மேலும் திரித்து வட இந்திய மொழிகள் "தோ(த்)தி" என வழங்குகின்றன.

தற்று உடுக்கப்படும் பெண்களின் ஆடை "தற்றாடை" (தட்டாடை) என வழங்கும். பார்ப்பனப் பெண்கள் இக் காலத்தில் கட்டும் "மடிதாறு" (மடிசார்)கூட ஒருவகைத் தற்றாடையே! இலங்கையில் சிங்களப் பெண்கள் கட்டும் இருபது முழம் சேலை "தற்றுடுப்பு" (தட்டுடுப்பு) என்றே அழைக்கப்படுகிறது. கால்களைச் சுற்றிச் சுரிந்து கட்டப்பட்ட வடநாட்டுப் பெண்களின் தற்றாடை இக்
காலத்தில் பையாடையாக மாறிவிட்ட பின்னரும் "சுரிதாறு" (சுரிதார்) என்றே அழைக்கப்படுகிறது!

அரையில் அணியும் உள்ளாடைகள் அக்காலத்தில் "தற்றி" எனப்பட்டன. கன்னடம், துளு, போன்ற திரவிட மொழிகள் இச் சொல்லைத் "தட்டி" என வழங்குகின்றன. தமிழர்களாகிய நாமோ "தட்டி"யையும் "ஜட்டி"யாக மாற்றி வழங்கிவருகின்றோம்.
இனிமேலாகிலும் "தற்றி" (தட்டி) எனச் செவ்வையாய் வழங்குவோமா?