Wednesday, May 6, 2009

குரவம்

'பெருமை' என்று பொருள்படும் பழந்தமிழ்ச் சொல் இது. கழக இலக்கியங்களில் "குரை" என்ற வடிவில் வழங்கியுள்ளது. "ஈனும் உம்பரும் பெறலருங் குரைத்தே" என்னும் ஐங்குறுநூற்றுப் பாடல் வரியில் "குரை" என்ற சொல் 'பெருமை' என்று
பொருள்படுகிறது.

குரை -> குரவு -> குரவம் = பெருமை.
குரவு -> குரவர் -> பெரியோர்.
தாய்தந்தையர் "இருமுதுகுரவர்" (சிலம்பு) எனப்படுதலையும், அரசன் ஆசிரியன்
தாய் தந்தை அண்ணன் ஆகிய ஐவரும் "ஐங்குரவர்" என்று அழைக்கப்படுதலையும் காண்க.

இந்தக் "குரவம்" என்ற சொல்லை வடசொல்லாக ஆக்க விழைந்தோர், 'உகர ஊகாரங்களை ஔகாரமாக்குதல்' என்னும் நெறியைப் பயன்படுத்தி, "கௌரவம்" ஆக்கிவிட்டனர். நாமும் வடசொல் என மருண்டுபோய்விட்டோம்.

இத்தகைய மருட்சி வினைக்கு இக்காலத்தில்கூட நல்லதொரு சான்றைக்
காட்டமுடியும். PHYSICS என்ற ஆங்கிலச் சொல்லை மொழிபெயர்த்தவர்கள்,
'ஐம்பூதங்களின் இயல்புகளை எடுத்துரைக்கும் அறிவியல்' என்று பொருள்படும்வகையில் "பூதிகம்" என்ற சொல்லைப் புனைந்தனர். இந்தச் சொல்லின் தமிழ் மணத்தைத் தாங்கமுடியாத வர்கள், 'உகர ஊகாரங்களை ஔகாரமாக்குதல்' என்னும் நெறியைப் பயன்படுத்தி, பூதிகம் -> பௌதிகம் என உருமாற்றி உலவவிட்டனர். நாமும் மருண்டுபோய் வேறு சொல்காணத்தொடங்கி, இன்றைக்கு "இயற்பியல்" என்ற சொல்லை ஏற்றுக்கொண்டுள்ளோம். இதனைப் பூதிகம் என்றே பொருத்தமுற வழங்கலாம்.

Tuesday, May 5, 2009

நாம்

தொல்காப்பியத்தில் வழங்கும் மிகத் தொன்மையான சொல் இது. இதன் மூலச்சொல் "நா" (நாக்கு) என்பதாம். நாலும் (தொங்கும்) உறுப்பு "நா" எனப்பட்டது.

முற்கால மாந்தர் நாக்கினைக் கண்டு அஞ்சியுள்ளனர் என்பதனை இச் சொல் வரலாறு எடுத்துக்காட்டுகிறது. நாக்கை நீட்டிக்கொண்டிருக்கும் உயிரிகளான நாயையும் நாகத்தையும் மட்டும் அல்லாமல் நா நீட்டி அலைவதாகக் கருதிய பேயையும்
நினைத்து அஞ்சிய மக்கள் நாவிற்கே அச்சப் பொருள் கொண்டுவிட்டனர். அதனால்தான், கொழுந்துவிட்டு எரியும் தீச்சுடர்களைத் "தீநாக்குகள்" என்று அச்சத்தோடு அழைக்கின்றனர்.

நா + அம் = நாம் (=அச்சம்)
நாம் + அம் = நாமம் (=அச்சம்)

இன்றும் கண்ணெச்சிலுக்காக வைக்கப்படும் பொம்மைகள் நாக்கை நீட்டி அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்படுதல் காண்க.

நாயும் நாகமும்கூட நாவினால் பெயர்பெற்றவையே.

நா + இ = நாஇ -> நாயி -> நாய்.
நாவு + அம் = நாவம் -> நாகம்.