Saturday, December 18, 2010

வம்பு

"வெண்ணெய் திரண்டுவரும்போது தாழியை உடைத்ததுபோல், அந்தக் காரியத்தை
வம்பாய்க் கெடுத்திட்டாயே !"
தெருவிலே தம் நண்பரோடு ஒருவர் இவ்வாறு பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டதும்,
'ஊர் வம்பெல்லாம் உனக்கு எதற்கு?' என்று ஒதுங்கிப்போகும் இயல்புடைய
எனக்கு வம்பைப்பற்றி ஆராயும் எண்ணம் தோன்றியது.

தொல்தமிழின் முந்துநூலான தொல்காப்பியம் "வம்பு" என்ற சொல்லின் பொருள்
"நிலையின்மை" என்று உரியியலில் குறிப்பிடுகிறது. நிலையாக ஓரிடத்து
இல்லாமல் வேற்றூரில் திரிவோரையும் நிலையான தம் இயல்புகளிலிருந்து மாறி
அமையும் மக்களையும் இயற்கையையும்கூட "வம்பு"ச் சொல் குறித்துள்ளது.

வம்ப மாந்தர் = தம் ஊரில் வதியாது வேற்றூர் வந்த புதியோர்.
வம்பலன் = புதியோன், வழிப்போக்கன், அயலான்.
வம்ப மாக்கள் = புதியோர். (சிலப்,5.111)
வம்பப் பரத்தர் = ஒரு கூட்டத்திலும் சேராத மாந்தர்.(சிலப்,16.63 உரை)
வம்பப் பரத்தை = கழிகாமத்தையுடைய கணிகை. (சிலப்,10.219)
வம்புப் பிள்ளை = முறைதவறிய பெண் பெற்ற குழந்தை.
வம்ப மாரி = காலமல்லாத காலத்துப் பெய்யும் மழை.
வம்புக் காய் = பருவம் தப்பிக் காய்க்கும் காய்.
வம்புப் பாளை = பருவமற்ற காலத்தில் பனைமரம் புதிதாக விடும் பாளை.


நிலையில்லாத இவற்றால் நீடித்த பயன் இல்லை என்பதை மக்கள் உணர்ந்தபின்னர்
"வம்பு"ச்சொல், 'பயன் இல்லாமை, வீண்' ஆகிய பொருள்களை உணர்த்தியுள்ளது.
வம்பு = பயன் இல்லாமை. "வம்பு பழுத்து" (திருவாச.40.6)
வம்பன் = பயனற்றவன். "வம்பனாய்த் திரிவேனை" (திருவாச.42.9)

இச் சொல் தெலுங்கு மொழியில் இதே பொருளில் "வம்மு" என வழங்குகிறது.
பயனற்றுப் போதலைத் தெலுங்கர் "வம்மு போவு" (வம்பாய்ப் போதல்) எனக்
குறிப்பிடுகின்றனர்.


அதன்பின்னர் தீயனவற்றைப் பேசுதலும் செய்தலுமே பயனற்றவை எனக் கொண்டு,
அவற்றின் வகைகளையும் "வம்பு"ச் சொல் பொருள்களாகப் பெற்றுவிட்டது.

வம்பு = 1.வீண்சொல், 2.பழிச்சொல், 3.தீய சொல், 4.பொய், 5.இடக்கர்ச் சொல்,
6.சிற்றொழுக்கம், 7.சிறு சண்டை.

வம்படித்தல் = 1.வீண்சொல் பேசுதல், 2.வேடிக்கையாய்ப் பேசுதல், 3.தீது
பேசுதல், 4.பழித்துப் பேசுதல், 5.தீங்கு செய்தல்.

வம்பளத்தல் = பழிமொழி பேசுதல்.

வம்புப் பேச்சு = வீண் பேச்சு.


"வழு" என்ற சொல்லிலிருந்து இச் சொல் தோன்றியிருக்கலாம்.

வழுவுதல் = நழுவுதல், சறுக்குதல், தவறுதல்.

வழுக்குதல் = சறுக்குதல், தவறு செய்தல்

வழுவழுத்தல் = வழுக்குதல், வழவழப்பாதல்.

வழுக்கும் இடத்தில் கால் நிலையாய் நிற்கமுடியாமையால் நிலையின்மைப் பொருள்
தோன்றி இருக்கலாம்.

வழு -> வழும்பு.
வழும்பு = தீங்கு, குற்றம்.

வழும்பு -> (வய்ம்பு) -> வம்பு.
ஒ.நோ : குழும்பு -> (குய்ம்பு) -> கும்பு.
கும்பு -> கும்பல்.


தீயனவற்றைப் பேசுதலையும் செய்தலையும் குறிக்கும் "வம்பு"ச் சொல், "வன்பு"
என்ற சொல்லின் திரிபாகும். "வல்" என்ற பொருந்தற் கருத்து வேரிலிருந்து
பிறக்கும் 'வல்லமை', 'வலிமை' ஆகிய சொற்கள் கட்டுப்பாடுடைய ஆற்றலையும்
'வன்மை' என்ற சொல் கட்டுப்பாடற்ற ஆற்றலையும் குறித்திடும்.

வல் -> வன் -> வன்மை.
வன்பாடுபடுதல் = அரும்பாடுபடுதல்.
வன்கொலையாய் இருத்தல் = பசி,பட்டினியாய் இருத்தல்.
வன்கொடுமை = மிகப் பெரிய கொடுமை.

வன் + பு = வன்பு -> வம்பு.
ஒ.நோ : தென்பு -> தெம்பு.

உடலில் வன்மை மிகுந்தால் செய்யவேண்டாத செயல்களை எல்லாம் செய்யத்
தூண்டும். இதன் அடிப்படையில்தான், 'வம்பு வளர்த்தல், வம்புச் சண்டைக்குப்
போதல், வம்புதும்பு பண்ணுதல், ஊர்வம்பை விலைக்கு வாங்குதல், வம்பேறி'
முதலான சொல் வழக்குகள் எழுந்துள்ளன.


"வம்பு"ச் சொல், 'அரைக் கச்சு, யானைக் கச்சு, மார்புக் கச்சு, கையுறை,
மேற்போர்வை' ஆகிய பொருள்களையும் குறிக்கிறது. இவை வளைவுக் கருத்து வேரான
"வல்" என்பதினின்று தோன்றியிருக்கலாம்.

வல் -> வலை.
வல் -> வலம் (ஊர்வலம், வலம்வருதல்)
வல் -> வல.
வலத்தல் = சுற்றுதல், சுற்றிக் கட்டுதல்.
வல் -> வன் -> வன்பு -> வம்பு.

1 comment:

  1. நீண்ட நாளுக்குப் பிறகு,

    பல அரிய தகவல்களை அறிய முடிகிறது

    வாழ்த்துகள்

    ReplyDelete