Sunday, December 7, 2008

முனைவர்

பல்கலைக்கழகங்களில் வழங்கப்பெறும் "டாக்டர்" பட்டப் பெயரினைப் "பண்டாரகர்" என்று வழங்கினார் பாவாணர். ஆனால் அச் சொல் சிலர்க்குப் பண்டாரத்தை நினைவூட்டியதால் "முனைவர்" என வழங்கத் தொடங்கினர். "வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல்நூல்" என்று தொல்காப்பியத்தைச் சான்று காட்டி இச் சொல்லே சரியான மொழிபெயர்ப்பெனச்
சிலர் வழக்காடினர். "முனைவு வெறுப்பாகும்" என்று தொல்காப்பியம்தானே கூறுகிறது. அதனால்தானே நம்மை வெறுக்கும் பகைவனும், உலகை வெறுத்த முனிவனும் "முனைவன்" எனப்பட்டனர் என்று சிலர்
எதிர்வழக்காடினர். வேறு சிலரோ"முனைதல்" என்ற சொல், ஒரு செயலை முழு ஈடுபாட்டோடு செய்வதைக் குறிக்கும்; எனவே, "முனைவர்" என்ற சொல்லைத் தொழில்முனைவோரைக் (entrepreneur) குறிக்க ஆளலாம் என்று கருத்துரைத்தனர்.

ஆனால் எதிர்ப்புகளை எல்லாம் மீறிக்கொண்டு "முனைவர்" என்ற சொல் இன்று வழக்கூன்றிவிட்டது. இதற்குப் பொருள் அமைதி எவ்வாறு கூறுவது? "முனை" என்ற சொல், முன்னையும் நுனியையும் முன்னிருக்கக்கூடிய தலைமையையும் நுனிவரையுள்ள உயர்வையும் குறிக்கும். எனவேதான், "முனைவன்" என்ற சொல் தலைவனையும் இறைவனையும் குறித்தது. முனை
- முனையன் - முனைவன். கல்வி நிலையில் உயர்வானதும் தலைமையானதுமான பட்டம் பெற்றவரை "முனைவர்" எனல் பொருத்தமுடையதுதானே.

No comments:

Post a Comment