Sunday, December 14, 2008

தோன்றின் புகழோடு தோன்றுக

காலை எழுந்ததும் குளம்பி குடித்துக்கொண்டே குறளைப் படிப்பது என் பழக்கம். அன்று "புகழ்" படித்துக்கொண்டிருந்தேன். என் பக்கத்து வீட்டு நண்பர், எங்கள் இல்ல வடிப்புக்குளம்பி(Filter coffee)யின் வழமை அன்பர், அருகில் வந்து அமர்ந்தார். நான் படித்த பகுதியைப் பார்த்துவிட்டுக் கேட்டார் : "இதில், `தோன்றின் புகழொடு தோன்றுக' என்ற குறள் நடைமுறைக்கு ஒத்துவராததாகத் தெரிகிறதே! புகழோடு பிறப்பதற்கு நாம் என்ன அமைச்சர் மக்களா, இல்லை நடிகர்களின் மக்களா, அல்லது இறும்பூதுப்
பிறவிகளா? பிறக்கும்போதே ஒருவர் எப்படிப் புகழோடு பிறக்கமுடியும்?" மடமடவென்று வினாக்களைத் தொடுத்த நண்பர், நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என் முகத்தையே பார்த்தார்.

"அந்தக் குறளைப் பார்த்தவுடன் உங்களுக்குத் தோன்றிய கருத்தைச் சொல்லிவிட்டீர்கள். இதிலிருந்தே தோன்றுதல் என்றால் பிறத்தல் என்ற பொருள் மட்டுமன்று, உள்ளத்தில் தோன்றுதல் என்ற பொருளும் உண்டென்பது தெரிகிறது அல்லவா? சரி, புத்தர், காந்தி போன்ற பெருமக்களை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" "அவர்களின் செயற்கருஞ் செயல்கள்"

"அதாவது, அவர்களின் புகழ் உங்களுக்குத் தோன்றுகிறது. நல்லது; இற்றிலர்(Hitlor), கோட்சே போன்றோரை நினைத்தவுடன்" "அதாவது, அவர்களைப் பற்றிய இகழ் உங்கள் உள்ளத்தில் தோன்றுகிறது. இப்படிப் புகழும் இல்லாமல் இகழும் இல்லாமல் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து மறைந்தவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? " "அவர்கள்தாமே உலகத்தில் பெரும்பான்மையினர்." "நல்லது.

இந்த மூன்று வகையான மக்களைப் பற்றித்தாம் திருவள்ளுவர் இக் குறளில் குறிப்பிட்டிருக்கிறார்." "எப்படி?"

"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று அதாவது, பிறர் உள்ளங்களில் தோன்றினால் புகழோடு தோன்றுக. அது முடியாதவர்கள் இகழோடு தோன்றுவதைக் காட்டிலும் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்து தான் வாழ்ந்த சுவடே தெரியாமல் மறைந்துபோகும் மக்களைப் போல ஒன்றுமே தோன்றாதிருப்பது நன்று. இப்போது சொல்லுங்கள்.. இந்தக் குறள்
நடைமுறைக்கு ஒத்ததுதானே.." நண்பர் நாவசைக்கமுடியாது ஆமெனத் தலையாட்டினார்.

No comments:

Post a Comment